பும்ரா ஒன்றும் அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சாளர் கிடையாது- பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கருத்து!

0
71
Bumrah

இன்று இரவு 8 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் 15வது ஆசிய கோப்பை போட்டி துவங்குகிறது. முதல் போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆனால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் போட்டிதான் முக்கிய கவனத்தைப் பெற்று இருக்கிறது!

உலக கோப்பைக்கு முன்பாக ஆசிய கோப்பையில் இந்திய அணி ஒரு முழுமையான அணியை களமிறக்க எண்ணியிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக முதுகுப்பகுதியில் காயமடைந்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவர் தற்போது பெங்களூரில் தேசிய கிரிக்கெட் அகடமியின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்திய அணிக்கு நிச்சயமாக ஒரு பின்னடைவுதான். ஆனாலும் இந்திய அணியில் அனுபவ புவனேஸ்வர் குமார், கட்ட ஓவர்களில் அசத்தும் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் இருப்பது பலமாகும்.

- Advertisement -

இதேபோல் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான 22வயது இடக்கை வேகப்பந்துவீச்சாளர் சாகின் ஷா அப்ரிடியும், இலங்கை தொடரின்போது முழங்காலில் காயமடைந்து, அப்போது ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இந்திய அணிக்கு பும்ரா விளையாட முடியாமல் போனதை விட பாகிஸ்தான் அணிக்கு இவர் விளையாட முடியாமல் போனது பெரிய பின்னடைவாக இருக்கும். ஏனென்றால் இவரது இடத்தை நிரப்பும் வகையில் பாகிஸ்தான் அணியில் வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் குறிப்பிடும்படி இல்லை.

தற்போது இதையெல்லாம் வைத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் இடக்கை பேட்ஸ்மேன் சல்மான் பட் ஒரு அதிர்ச்சிகரமான கருத்தை தெரிவித்து இருக்கிறார். அவர் தற்போதைய கிரிக்கெட் உலகில் வேகப்பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தும் அளவில் இல்லை என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

அவர் கூறும்போது ” உலக கிரிக்கெட்டில் தற்போது அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சு இல்லை. அச்சுறுத்தும் வேகத்துடன் வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களை நீங்கள் இப்போது பார்க்க முடியாது. முன்பு சோயிப் அக்தர், முகமது சமி, மிட்செல் ஜான்சன் போன்ற பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்கள் இருந்தனர். இந்தவகையில் அப்படி யாருமே இல்லை” என்று தெரிவித்தார்!

- Advertisement -

தொடர்ந்து பேசிய அவர் ” இப்போது எக்ஸ்பிரஸ் வேகம் என்பது கிடையாது. அன்பும் பும்ரா சிறந்த வேகப்பந்து வீச்சு பவுலர் தான். அவரிடம் நல்ல யார்க்கர்கள், நல்ல மெதுவான பந்துகள் இருக்கிறது. ஆனால் அவரிடம் அச்சுறுத்தும் வேகம் கிடையாது. பாகிஸ்தானுக்கு ஹாரிஸ், ஹஸ்னைன் ஆரம்பத்தில் வேகத்தில் நம்பிக்கை அளித்தார்கள். ஆனால் அவர்களும் தற்போது அதே வேகத்தில் வீசுவதில்லை. அன்றிச் நோக்கியா மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பேசுகிறார். ஆனால் அவரும் தொடர்ந்து அப்படி வீசுவதில்லை. மிச்செல் ஸ்டார்க்கும் இதேதான். இப்போதைக்கு உலகில் அபாயகரமான ஒரு வேகப்பந்துவீச்சாளர் என்றால் அது இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் மட்டுமே இருக்கிறார்” என்று தெரிவித்து இருக்கிறார்!