டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா இன்னும் விலகவில்லை – பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பரபரப்பு கருத்து!

0
503
Rahul Dravid

இன்றைய கிரிக்கெட் உலகில் சந்தேகத்திற்கு இடமில்லாமல், மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இருக்கிறார் என்றால் அது இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராதான்!

மணிக்குத் தொடர்ச்சியாக 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேலும், வேகத்தில் பல மாறுபாடுகளை காட்டியும், ஸ்விங் செய்யக்கூடிய திறமையும், ஷார்ட், யார்க்கர், பிளாக் ஹோல் எல்லா வகையான பந்துகளையும் வேகப்பந்து வீச்சில் வீச முடிந்த, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அதற்கு ஏற்றார்போல் மாற முடிந்த தற்போதைய தலைசிறந்த பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா.

- Advertisement -

இவரது பந்துவீச்சு முறை பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஆரம்பத்தில் இவரை பார்த்தவர்கள் இவர் பந்து வீசும் முறையால் அடிக்கடி காயமாகக் கூடும் என்று எச்சரித்தார்கள். ஆனால் அதைத்தாண்டி அவர் சர்வதேச கிரிக்கெட்டில் காயங்கள் இல்லாமல் 2019 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து வந்தார். அதற்கடுத்து அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயம் என்பது, அவரது பந்துவீசும் முறையால் முதுகு பகுதிக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாவது. இதற்கு அறுவை சிகிச்சை கிடையாது. மாறாக ஓய்வுதான் இதற்கான சிகிச்சை.

நிலைமை இப்படி இருக்க, பக்கத்தில் டி20 உலக கோப்பை இருக்க, தற்போது மீண்டும் ஜஸ்பிரித் பும்ரா முதுகுப்பகுதி காயத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் இவர் தற்போது நடந்து வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும், அடுத்து நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இருந்தும் விலகினார் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு டி20 உலகக் கோப்பை இந்திய அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாகும். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜஸ்பிரித் பும்ரா நிலைமை பற்றி, அவர் டி20 உலக கோப்பையில் பங்கேற்பது பற்றி பரபரப்பான புதிய கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

- Advertisement -

இது பற்றி ராகுல் டிராவிட் கூறுகையில்
” தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் அவர் இங்கிருந்து தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுவிட்டார். மேலும் அங்கிருந்து கிடைக்கப்பெறும் அடுத்தகட்ட அதிகாரப்பூர்வ தகவலுக்காக நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். எனவே இப்போது அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறவில்லை. ஆனால் அடுத்த சில நாட்களில் அவர் குறித்து கிடைக்கும் அதிகாரப்பூர்வ தகவலை வைத்துதான் எதையும் கூற முடியும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய ராகுல் டிராவிட் ” உண்மையைச் சொல்வதென்றால் நான் அவரது மருத்துவ அறிக்கை பற்றி ஆழமாகச் சென்று பார்க்கவில்லை. அதாவது இது குறித்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள நான் இது சம்பந்தமான நிபுணர்களை நம்பியிருக்கிறேன். தற்போது அவர் எப்படி இருக்கிறார் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. எங்களுக்குத் தேவையான சரியான நேரத்தில் நாங்கள் அவரின் நிலைமை குறித்து அறிந்து கொள்வோம். மேலும் அவரது நிலைமை குறித்து அதிகாரப்பூர்வ வெளியேற்றப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வரும் வரை நாங்கள் அவர் விஷயத்தில் நம்பிக்கையோடு இருப்போம். ஒரு குழுவாக மட்டுமல்ல நாங்கள் தனிநபராவும் சிறந்ததை மட்டுமே விரும்புவோம் ” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்!