பும்ரா பெராரி ; டொயோட்டோ இல்லை; – இந்திய அணி நிர்வாகத்தை எச்சரித்த சல்மான் பட்!

0
1026
Bumrah

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில், இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாக, இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால், டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து விலகி இருப்பது அமைந்திருக்கிறது!

ஜஸ்பிரித் பும்ராவுக்கு இப்படியான முதுகுப்பகுதி காயம் ஏற்படுவது முதல் முறையல்ல. இதற்கு முன் 2019ஆம் ஆண்டு இப்படி நடந்து கணிசமான காலம் கிரிக்கெட்டை அவர் தவற விட்டார். இதற்கு அடுத்து இங்கிலாந்து தொடரில் மீண்டும் காயமடைந்தார். இதனால் அடுத்து வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் ஆசியக் கோப்பை தொடர்களில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை இந்திய அணியிலும், இந்தியாவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் உடன் நடக்கும் டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்து இருந்தார். ஆனால் தற்போது அவரது முதுகுப்பகுதி காயம் அதிகமாக அவர் மொத்தமாக வெளியேறி இருக்கிறார்.

அவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தின் பெயர் ஸ்ட்ரெஸ் பிராக்ச்சர். இந்தக் காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது. இதற்கு நல்ல ஓய்வுதான் தேவை. குறித்து தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் சில முக்கியமான எச்சரிக்கைகளை இந்திய அணி நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளார்.

இதுபற்றி சல்மான் பட் கூறும்பொழுது
” பும்ராவின் பந்துவீச்சு செயல் அவரது முதுகு பகுதியில் அதிக சுமையை ஏற்படுத்துகிறது. அவர் இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறார். மேலும் ஐபிஎல் தொடரிலும் விளையாடுகிறார். இது ஒரு நீண்ட தொடர் ஆகும். எனவே இந்த விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் தேர்ந்தெடுத்து அவரை விளையாட வைக்க வேண்டும். பும்ரா ஒரு ஃபெராரி, ஆஸ்டன் மார்ட்டின், லம்போர்கினி போன்ற வேகமாக செல்லக்கூடிய சொகுசு கார்கள் போன்றவர். இவர் நம்முடைய அன்றாட பயன்பாட்டு டொயோட்டா போன்ற கார் கிடையாது. இந்த வண்டியை யார் வேண்டுமானாலும் ஓட்டலாம், அதாவது கீறல் செய்யலாம், அதனால் எந்தப் பெரிய பாதிப்பும் உருவாகாது. ஆனால் அதிவேகமாகச் செல்லக் கூடிய கார்கள் அப்படியல்ல. அவைகள் வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்க தக்கவை. பும்ராவும் அப்படி ஆனவர்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பும்ரா சிறந்த தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். அவர் அனுபவம் வாய்ந்தவர் மேலும் மேட்ச் வின்னர். அவர் ஒரு ஆட்டத்தில் எல்லாப் பகுதிகளிலும் பந்துவீச கூடியவர். துவக்கத்திலேயே பந்துவீச்சில் அழுத்தம் தரக்கூடியவர். அவர் பல்துறை பந்துவீச்சாளர். அவர் வெற்றிடத்தை அணி நிச்சயம் உணரும். ஆனால் இந்த நிலையை இந்திய அணி நிர்வாகம் எப்படி சமாளிக்கிறது என்று பார்க்கவேண்டும். இளைய வேகப்பந்து வீச்சாளர்கள் முன்னேற இது ஒரு சிறந்த காலம். பும்ரா மீண்டும் உடல் தகுதி பெறும்போது அவர் அணிக்குள் திரும்புவார். அதுவரை பும்ரா இடத்தை யார் நிரப்புகிறார்கள் என்று பார்க்க வேண்டும் ” என்று கூறியிருக்கிறார்!