தம்பி நீ இதை செய்யல அப்படினா டீம் உன்ன விட்டு விலகிடும் – ரிஷப் பண்ட்க்கு ஜடேஜா எச்சரிக்கை!

0
143
Rishab

இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக, பேட்டிங்கில் பினிஷராக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பர் ஆகவும் மகேந்திர சிங் தோனி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். இப்படிப்பட்ட ஒரு பெரிய வீரரின் இடத்தை நிரப்ப இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு இளைஞர் ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்பி விட்டாரா என்றால் கிடையாது. நிரப்பவும் முடியாது. ஆனால் அவருக்கு தரப்படும் கதாப்பாத்திரத்தை சரியாக செய்து இருக்கிறாரா என்றால் இல்லை. இதுதான் அவருக்கு தற்பொழுது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

ரிஷப் பண்ட் இயல்பாகவே ஒரு அதிரடியான வீரர். டி20 கிரிக்கெட் வடிவம் அவருக்கு ஏற்ற ஒன்று. ஆனால் அவர் நீண்ட கிரிக்கெட் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் நல்ல சாதனைகளை வைத்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளிலும் கூட பரவாயில்லை. ஆனால் அவருக்கு ஏற்ற டி20 கிரிக்கெட் வடிவத்தில்தான் மிகவும் தடுமாறுகிறார்.

ரிஷப் பண்ட் 15 பேர் கொண்ட இந்திய டி20 அணியில் இடம் பெற்றாலும், அவருக்கு ஆடும் அணியில் இடம் கிடைப்பதில்லை. அவருக்குப் பதிலாக மூத்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்தான் இடம் பெற்று வருகிறார். தென் ஆப்பிரிக்க அணியுடன் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு துவக்க வீரராக ஒரு வாய்ப்பு கிடைத்தது. 14 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 27 ரன்கள் எடுத்த அவர், தேவையில்லாமல் வழக்கம்போல் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

இவரின் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவர் கூறும் பொழுது ” ஆம் ரிஷப் பண்ட் அன்று தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டார். அவர் தனது பார்ட்னரான தினேஷ் கார்த்திக்கை பார்க்க வேண்டும். தினேஷ் கார்த்திக்கை இந்திய அணி நிர்வாகம் நம்ப 15 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. தினேஷ் கார்த்திக் கடந்த 15 ஆண்டுகளாக இதே திறமையோடுதான் இருந்தார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒவ்வொரு முறை அணிக்குள் வரும் பொழுதும், அணி ஒவ்வொரு திறமையை எதிர்பார்க்கும், அப்பொழுதெல்லாம் நீங்கள் அதை வழங்க வேண்டும். இல்லையென்றால் அணி உங்களை விட்டு விலகி விடும் ” என்று எச்சரிக்கை கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் ” ரிஷப் பண்ட் தனக்கு தீர்வை தேட அணியிலேயே ஒரு நல்ல துணையை வைத்திருக்கிறார். அவர் தினேஷ் கார்த்திக் இடமே சென்று, ‘நான் எந்த இடத்தில் தவறு செய்கிறேன்? நான் எதைச் சரி செய்ய வேண்டும்? இந்த மாதிரி சூழ்நிலையில் இருந்து வந்தவர்தான் நீங்கள். உங்களுக்கு இதெல்லாம் தெரியும் கூறுங்கள்” என்று கேட்க வேண்டும். ரிஷப் பண்ட்டின் திறமையில் எந்தப் பஞ்சமும் இல்லை. எனவே ரிஷப் பண்ட் தன்னிடம் தவறும் ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு பேச தினேஷ் கார்த்திக் நல்ல நபராக இருப்பார். தினேஷ் கார்த்திக் அடிக்கடி அணிக்கு வெளியே போய் உள்ளே வந்த அனுபவம் கொண்டவர். அவரை எல்லாம் கைவிட்ட போதும், சரியானவற்றை கண்டுபிடித்து மீண்டும் அணிக்குள் வந்துவிட்டார். எனவே அவரிடம் ரிஷப் பண்ட் கற்றுக்கொள்ளலாம் ” என்று வழிகாட்டி பேசியுள்ளார்.