இங்கிலாந்து அணியைத் தயாரிக்க புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அறிவிப்பு

0
749
Ben Stokes and Brendon McCullum

2015 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐம்பது ஓவர் உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது. இதனையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை பதவிக்கு வந்த முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆன்ட்ரூ ஸ்டிராஸ் தலைமையில், 2019 இங்கிலாந்தில் நடைபெற்ற ஐம்பது ஓவர் உலகக்கோப்பைக்கான ஒரு நான்காண்டு செயல்திட்டம் வகுக்கப்பட்டு, இங்கிலாந்தின் கிரிக்கெட் மரபுகள் உடைக்கப்பட்டு, கிராஸ் பேட் ஷாட்ஸ் ஆடும் ப்ளேயர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாகப் போடப்பட்டு, பல்வேறு மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. இதன் காரணமாக 2019 இங்கிலாந்தில் நடந்த ஐம்பது ஓவர் உலகக்கோப்பையில் இங்கிலாந்தும் சாம்பியன் ஆனது.

ஒருபுறம் இந்த மாற்றங்கள் உலகக்கோப்பையைக் கொண்டு வந்திருந்தாலும், இன்னொரு புறத்தில் இங்கிலாந்து வீரர்களின் டெஸ்ட் கிரிக்கெட் திறமைகள் குறைய தொடங்கிவிட்டது. இங்கிலாந்தின் கவுன்டி அணிகள் டெஸ்ட் போட்டிகளுக்கான தரமான வீரர்களை உருவாக்க தவறிவிட்டது. இதனால் இங்கிலாந்து டெஸ்ட் அணி தொடர் தோல்விகளைச் சந்திக்க ஆரம்பித்தது. இறுதியாக ஆஸ்திரேலியாவில் ஆசஷ் தொடரில் படுமோசமாய் அடிவாங்கி, வெஸ்ட் இன்டீஸ் தொடரிலும் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதெல்லாம் சேர்த்து ஜோ ரூட்டின் கேப்டன்ஷிப் மீது விமர்சனங்களை உருவாக்கிவிட்டது. ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக அவர் டெஸ்டில் மிகச்சிறப்பாகவே ரன்களை குவித்திருந்தார். கவுன்டி அணிகள் டெஸ்ட் வீரர்களைத் தயாரிப்பதில் தோல்வியடைந்தது, ஜோ ரூட்டின் கேப்டன் பொறுப்பை பலிவாங்கி விட்டது. சமீபத்தில் ஜோ ரூட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார். இதற்கு நடுவில் கவுன்டி அணிகள் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தன. இதற்காக பென் ஸ்டோக்ஸ், சாம் கரன் போன்ற இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல் தொடரிலும் பங்கேற்கவில்லை.

இதனை அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் பொறுப்பை ஏற்க பென் ஸ்டோக்ஸ் முன்வந்தார். ஆனால் அவர் ஆன்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இருவரையும் டெஸ்ட் அணிக்குள் கொண்டுவர வேண்டுமென்று கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால் டெஸ் அணிக்கு யாரை புதிய பயிற்யாளராகக் கொண்டுவருவது என்று பெரிய குழப்பம் நிலவி வந்தது. தற்போது இங்கிலாந்து டெஸ் அணிக்கு, நியூசிலாந்தின் பிரபல முன்னாள் வீரர் பிரன்டன் மெக்கல்லம் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்க உள்ளதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் மெக்கல்லம், 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6453 ரன்களை குவித்துள்ளார். இதில் 12 சதங்களும், 31 அரைசதங்களும் அடங்கும். டெஸ்டில் முச்சதம் அடித்த ஒரே நியூசிலாந்து வீரர் மெக்கல்லம்தான். இவர் இந்த முச்சதத்தை இந்தியாவிற்கு எதிராக வெலிங்டனில் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -