இவர்களால் தான் இந்திய அணி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது – புகழாரம் சூட்டிய கேஎல் ராகுல்!

0
100

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றதற்கு இவர்கள் தான் முக்கிய காரணம் என்று கேப்டன் கே எல் ராகுல் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். பலம்மிக்க இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஜிம்பாப்வே அணி வீரர்கள் மிகவும் திணறினர். காயத்திலிருந்து மீண்டு வந்த தீபக் சஹர் முதல் மூன்று ஜிம்பாப்வே வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி திணறடித்தார்.

- Advertisement -

ஜிம்பாப்வே அணியின் நம்பிக்கை வீரர் சிக்கந்தர் ராசா 12 ரன்கள், சக்கப்வா 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, நகரா 34 ரன்களும் இவன்ஸ் 33 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். 41 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் ஜிம்பாப்வே அணி இழந்து, 189 ரன்கள் மட்டுமே இறுதியில் எடுக்க முடிந்தது.

எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஜோடி விக்கெட் இழப்பின்றி 31 வது ஓவரில் 192 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெறச்செய்தது. காயம் காரணமாக வெளியில் இருந்த கே எல் ராகுல் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்து கேப்டன் பொறுப்பையும் ஏற்று விளையாடினார். இந்திய அணி வெற்றி பெற்றது குறித்து போட்டி முடிந்த பிறகு அவர் பேட்டியளித்தார்.

“இந்திய வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாக நிறைய கிரிக்கெட் போட்டிகளை விளையாடுகிறோம். இதனால் அடிக்கடி காயம் ஏற்படுகிறது. காயம் காரணமாக வெளியில் இருப்பது மிகவும் கடினம். தீபக் சஹர், குல்தீப் ஆகியோரும் காயம் காரணமாக வெளியில் இருந்தனர். அவர்களுடன் பெங்களூருவில் சிகிச்சையில் இருக்கும் பொழுது மிகவும் கடினமானதாகவும் இருந்தது. ஆனால் ஒன்றாக பயிற்சியை மேற்கொண்டு தற்போது மீண்டு வந்திருக்கிறோம்.” என்றார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறித்து பேசி அவர், “மைதானத்தில் ஸ்விங் மற்றும் சீம் இரண்டும் இருந்தது. இதனை தீபக் சஹர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவர் மட்டுமல்ல, அனைத்து இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சும் மிகவும் துல்லியமாக இருந்தது. ஆரம்ப கட்டத்தில் தீபக் சஹர் விக்கெட் எடுத்த விதம் இந்திய அணியை விரைவாக முன்னோக்கி எடுத்துச் சென்றது. மீண்டும் இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் வந்தது மகிழ்ச்சி அளித்தாலும், ஒட்டுமொத்த அணியாக செயல்பட்டு வெற்றியை பெற்றது கூடுதல் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு போட்டியில் விளையாடியதும் நல்ல மனநிலையை தந்திருக்கிறது. இது ஒட்டு மொத்த அணிக்கு கிடைத்த வெற்றி.” என்று அவர் பேசினார்.