இந்திய அணிக்கு பெரிய சிக்கல் காத்திருக்கிறது – பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா எச்சரிக்கை!

0
36
Asiacup2022

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் சுற்றில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது இந்திய ரசிகர்களுக்கு மணி நிர்வாகத்திற்கும் மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான்!

ஆனால் இந்திய அணிக்கு அதன் பந்துவீச்சு பெரிய அளவில் கவலையளிப்பதாக மாறியுள்ளது. ஆசியக் கோப்பைக்கான இந்திய அணிக்கு 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள். ஒரு கூடுதல் சுழற்பந்துவீச்சாளர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுமே ஆடும் அணியில் இடம் பிடிக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது. இந்தநிலையில் ஆவேஸ் கான் மற்றும் அர்ஸ்தீப் சிங் இருவரும் அதிக அளவில் ரன்கள் தர அது புவனேஷ்வர் குமாருக்கு மிகப்பெரிய அழுத்தமாக மாறுகிறது.

இன்னொருபுறம் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு துறையின் முதன்மை பந்து வீச்சாளரான சாகல் இதுவரை இரண்டு ஆட்டங்களிலும் எந்த ஒரு பெரிய தாக்கத்தையும் உருவாக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் பாகிஸ்தான் அணியுடன் முப்பத்தி இரண்டு ரன்களையும் கசிய விட்டார்.

தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு செயல்பாடு மிகவும் சிறப்பாக இருப்பதால் இவர்களின் ஒட்டுமொத்த குறையும் பெரிய அளவில் வெளியே கவனத்திற்கு வராமலும், இந்திய அணியின் வெற்றியை பெரிய அளவில் பாதிக்காமலும் இருந்து வருகிறது. ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தங்கள் அணியின் இரண்டாவது பகுதி பந்துவீச்சு மோசமாக இருப்பதாக வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஸ் கூறும்பொழுது ” இந்திய அணியின் பந்து வீச்சு கவலைக்குரியதாக மாறி வருகிறது. ஆவேஸ் கான் நிறைய ரன்களுக்கு போகிறார். அர்ஸ்தீப் சிங்கும் ரன்களுக்கு போகும் பொழுது அது புவனேஷ்வர் குமாருக்கு பந்துவீச்சில் அழுத்தமாக மாறுகிறது. அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான சாகல் சிறப்பான முறையில் செயல்பட முடியாமல் தடுமாறி வருகிறார். இங்குள்ள சூழல்களில் ஆடுகளங்களில் காற்றில் பந்தை வேகமாக வீசும் ரவி பிஷ்னோய் சரியாக இருப்பார்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக நீங்கள் ஹர்திக் பாண்டியாவின் பணிச்சுமையை சரியாக நிர்வகிக்க வேண்டும். பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரில் நீங்கள் யாரை வேண்டுமானாலும் விரும்பலாம் ஆனால் அதை கடைபிடிக்க வேண்டும். ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு தருவதாக இருந்தால் நான் தீபக் ஹூடாவைத்தான் அணியில் எடுப்பேன்” என்றும் தெரிவித்து இருக்கிறார்!

இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தான் அணியை மீண்டும் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சுற்றில் பாகிஸ்தான் இலங்கை ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளையும் இந்திய அணி சந்திக்கின்றது. இதில் குறைந்தது இரண்டு அணிகளையாவது நல்ல ரன் ரேட்டில் வென்றால் தான் இறுதிப்போட்டிக்கு நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.