“சிலரிடம் மட்டுமே இருக்கும் சிறப்பு திறமை அவரிடம் இருக்கிறது” – இளம் வீரர் பற்றி புவனேஷ்வர் குமார் புகழ்ச்சி!

0
297
Bhuvneshwar kumar

உலகக் கிரிக்கெட்டில் எப்படியான தாக்கங்களை ஐபிஎல் தொடர் உருவாக்கினாலும், இந்திய கிரிக்கெட்டில் அதிக நல்லவிதமான தாக்கங்களையே உருவாக்கி வருகிறது. இந்தியாவின் மிகச்சிறிய நகரங்களில் இருந்தும் கிரிக்கெட் வீரர்கள் புறப்பட்டு வந்துகொண்டே இருக்கிறார்கள். இவர்களைக் கண்டறிவது ஐபிஎல் தொடரால் இப்போது எளிமையாகி இருக்கிறது!

உதாரணமாக இந்த ஐபிஎல் தொடரை எடுத்துக்கொண்டாலே இதற்கு உதாரணமாக பல இளம் வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குஜராத் அணிக்காக விளையாடிய யாஷ் தயால், லக்னோ அணிக்காக விளையாடிய மோசின் கான் மற்றும் பதோனி, ஹைதராபாத் அணிக்காக விளையாடிய உம்ரான் மாலிக் போன்றவர்கள்.

இவர்களுக்கு முன்பாகவே பஞ்சாப் அணிக்காக கடந்த சில சீசன்களாக மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் அர்ஷ்தீப் சிங். 2019ஆம் ஆண்டு ஆண்டு பஞ்சாப் அணிக்காக அடிப்படை விலையான இருபது இலட்சத்திற்கு வாங்கப்பட்ட இவர், இந்த ஆண்டு பஞ்சாப் அணியால் நான்கு கோடிக்குத் தக்கவைக்கப்பட்டார்.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு பெற்ற இவரது பவுலிங் எகானமி 10.90. அடுத்த இரு ஆண்டுகளில் 8.77, 8.27 எனக் குறைந்தது. கடந்த ஆண்டு 12 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த ஆண்டு இவரது பந்துவீச்சு மேலும் கூர்மையாகியது. இதனால் இவரது ஒரு ஓவரில் சராசரியாக 7.70 ரன்களை மட்டுமே எதிரணியால் அடிக்க முடிக்க முடிந்தது. இவரது பந்துவீச்சை எதிரணிகள் கவனமாக விளையாட ஆரம்பித்ததால் 14 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். இவரை அடிக்க நினைத்தால் விக்கெட் போய்விடுகிறது என்பதால் எதிரணிகள் இந்த முடிவுக்கு வந்துவிட்டார்கள். அந்தளவிற்கு பந்துவீச்சில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.

புதுப்பந்தில் பவர்-ப்ளேவில் பந்தை காற்றில் இருபுறமும் சிறப்பாக ஸ்விங் செய்கிறார். ஆட்டத்தின் இறுதிக்கட்ட ஓவர்களில் மிகச்சிறப்பாக யார்க்கர், பிலாக்ஹோல் பந்துகளை வீசுகிறார். இத்தோடு சிறப்பான மெதுவான பந்துகளையும், பவுன்சர் பந்துகளையும் வீசுகிறார். மொத்தத்தில் ஒரு முழுமையான வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார். இவரது இந்தச் சிறப்பான முன்னேற்றத்தால் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடியும் வருகிறார்!

இவரது திறமைக் குறித்து இந்திய அணியின் தற்போதைய மூத்த வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் வெகுவாகப் பாராட்டி பேசியிருக்கிறார். அதில் அவர் “அர்ஷ்தீப் சிங்குக்கு என்ன தேவையென்று மிகச் சரியாகத் தெரியும். இதுவே அவரைப் பற்றிய சிறந்த விசயம். எந்த பீல்ல் செட்டிங் வேண்டும்? எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி வீச வேண்டும்? என்று சில புதியவர்களுக்கே தெரியும். அந்த முதிர்ச்சி அர்ஷ்தீப் சிங்கிடம் அதிகமாக இருக்கிறது” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்!