ரசிகர்களை கண்டுகொள்ளாமல் சென்ற புவி மீது கடுப்பான சூரியகுமார் யாதவ் – விடியோ!

0
149

ரசிகர்களை கண்டுகொள்ளாமல் சென்ற புவனேஸ்வர் குமார் மீது சூரியகுமார் யாதவ் கடுப்பான வீடியோ யூடியூப் தளத்தில் வைரலாகியுள்ளது.

15வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. தொடர்ச்சியாக கடந்த இரண்டு ஆசியகோப்பை தொடரை வென்றிருந்த இந்திய அணி, இம்முறையும் ஆசிய கோப்பை தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. லீக் சுற்றில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது.

சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் கடைசி ஓவரில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதேபோல இலங்கை அணியுடனும் கடைசி ஓவரில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

சம்பிரதாயத்திற்காக நடத்தப்பட்ட மூன்றாவது சூப்பர் 4 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்தியா, முதலில் பேட்டிங் செய்தது. கிட்டத்தட்ட 1000 நாட்களாக தனது 71 வது சதத்தை பூர்த்தி செய்வதற்காக காத்திருந்த விராட் கோலி, இந்த போட்டியை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனது 71 வது சதத்தை நிறைவு செய்தார். மேலும் சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

அதன் பிறகு பந்துவீச்சை மேற்கொண்ட இந்திய அணிக்கு புவனேஸ்வர் குமார் அசத்தினார். 4 ஓவர்களில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற கூடுதல் பெருமையையும் பெற்றிருந்தார்.

போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு ஒன்றன்பின் மற்றொருவராக மைதானத்திற்கு வெளியே வந்த வீரர்கள் ஹோட்டல் அறைக்கு செல்ல பேருந்தில் ஏறினர். விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் முதலில் வந்தனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக செயல்பட்டதால் புவனேஸ்வர் குமாருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

“புவி..புவி” என்று ரசிகர்கள் கூச்சலிட்டனர். அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள ஆர்வமுடன் அழைத்தனர். ஆனால் புவனேஸ்வர் குமார் அதை கண்டு கொள்ளாமல் பேருந்துக்குள் ஏறுவதற்கு முற்பட்டார். புவனேஸ்வர் குமாருக்கு பின்னே வந்துகொண்டிருந்த சூரியகுமார் யாதவ், ரசிகர்கள் அழைக்கிறார்கள் அவர்களுடன் சென்று பேசுங்கள் என்று வற்புறுத்தினார். ஆனாலும் அதையும் கண்டு கொள்ளாமல் புவனேஸ்வர் குமார் பேருந்துக்குள்ளே ஏறிவிட்டார். இதனால் சிறிது கடுப்பான சூரியகுமார் யாதவ் தலையில் அடித்தபடியே பேருந்துக்குள் தானும் ஏறினார்.

இதன் வீடியோவை ரசிகர்கள் மத்தியில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர் காட்சிப் பதிவு செய்து யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரல் ஆகியுள்ளது.