” இந்தப் பையனை உலகக்கோப்பை டீம்ல இருந்து வெளிய அனுப்பறது நல்லது” – வாசிம் ஜாபர் அதிரடி கருத்து!

0
5637
Wasim Jaffer

இந்திய அணி தேர்வுக்குழு கடந்த வாரம் திங்கட்கிழமை, ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கவிருக்கும் டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியையும் 4 ரிசர்வு வீரர்களையும் அறிவித்தது.

இந்த அறிவிப்புக்குப் பின் இன்றுவரை அறிவிக்கப்பட்ட அணி குறித்தும், அணி கலவை குறித்தும், ஆடும் அணி குறித்தும், மேலும் இறுதி அணி எதுவாக இருக்க வேண்டும் யார் வெளியே அனுப்பப்பட வேண்டும் என்று பல கருத்துக்கள் தொடர்ந்து கிரிக்கெட் மட்டங்களில் பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக உள்நாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக தலா 3 போட்டிகள் கொண்ட 2 டி20 சர்வதேச தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களுமே உலக கோப்பைக்கு எந்த மாதிரியான அணியை வைப்பது என்கின்ற முடிவுக்கு இந்திய அணியை கொண்டுவர வசதியாக இருக்கும்.

உலகக்கோப்பையை மனதில் வைத்து, தற்போது நடக்க இருக்கும் டி20 தொடர்களில் யார் யார் விளையாடலாம் யார் தேவையில்லை என்பது பற்றியான விவாதங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் வீரரும் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் குறித்து விமர்சனப் பார்வையில் சிறப்பாக செயல்பட்டு வரும் வாசிம் ஜாபர் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். அவர் தனது அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் அக்சர் படேல் இருவரும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் ரிஷப் பண்ட்க்கு இடம் தரவில்லை.

இதுதொடர்பாக வாசிம் ஜாபர் பேசுகையில் ” சமீப காலங்களில் அக்சர் படேல் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார். ஆனாலும் இந்திய அணி நிர்வாகம் அவரை ஏன் நம்பவில்லை என்று தெரியவில்லை. ஏனெனில் அவர் பேட்டிங்கிலும் இந்திய அணியை வெல்ல வைத்திருக்கிறார். ரிஷப் பண்ட் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் ஒரு முடிவுக்கு வரவேண்டும். ரிஷப் பண்ட் குறித்து முன்பு இருந்து இந்திய கிரிக்கெட் சிந்தனையாளர்கள் நிறைய யோசித்து வந்தார்கள். நாங்கள் இதைப் பற்றி பலமுறை பேசி உள்ளோம். அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில், அணி போட்டியை வெல்லும் ஆட்டங்களை ஆடியிருக்கிறார். ஆனால் அவர் டி20 போட்டிகளில் சர்வதேச டி20 போட்டிகளில் அப்படி செயல்படவில்லை ” என்று கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர் “எனவே ரிஷப் பண்ட் உடன் இருக்க வேண்டுமா இல்லை ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் உடன் போகவேண்டுமா என்று இந்திய அணி நிர்வாகம் உடனே முடிவு செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில் என்னை பொருத்தவரையில் தற்போதைய இந்திய அணியில் ரிஷப் பண்ட் பொருந்தவில்லை. அவருக்கு 4 அல்லது 5 ஆம் இடங்கள் பேட்டிங்கில் சரியானதாக இருக்கும். ஆனால் அந்த இடங்களுக்கு வேறு வீரர்கள் இருக்கிறார்கள். உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட்டை வெளியேற்றுவது சிறந்த முடிவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.