உலகக் கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வு அறிவிப்பு ! அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்

0
227
Ben Stokes

பெஞ்சமின் ஆன்ட்ரூ ஸ்டோக்ஸ் என்பதுதான் பென் ஸ்டோக்ஸ். தற்போதைய இங்கிலாந்து கிரிக்கெட்டின் மிக முக்கியமான வீரர். தற்போதைய கிரிக்கெட் உலகில் தலைசிறந்த ஆல்ரவுண்டர். சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இருந்தார்!

தற்போது 31 வயதாகும் பென் ஸ்டோக்ஸ் பிறந்தது நியூசிலாந்து நாட்டில் கிறைஸ்ட்சர்ச் நகரில்தான். ஆனால் இவர் இங்கிலாந்து நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இவரது முதல் சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் இங்கிலாந்து அணிக்காக ஆகஸ்ட் மாதம் 2011ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அமைந்தது!

2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி பங்களாதேஷ் அணி வரை தோற்று, முதல் சுற்றோடு வெளியேறியது. அப்பொழுது அடுத்த உலகக்கோப்பை 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்க இருந்தது!

இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பைக்காக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் முன்னெடுக்கப்பட்ட மாற்றங்களில் எஞ்சி 2019ஆம் உலகக்கோப்பைக்காக வடிகட்டப்பட்ட பழைய வீரர்களில் பென் ஸ்டோக்சும் ஒருவர். அவரை நிறுத்தி எடுத்துக் கொண்டு வந்ததிற்காக நியாயத்தை பல போட்டிகளில் செய்திருக்கிறார்.

பென் ஸ்டோக்ஸை மிகக் குறிப்பிட்டு சொல்வதென்றால் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதிபோட்டியைச் சொல்லலாம். போட்டி சமனில் முடிந்து, பின்பு சூப்பர் ஓவர் போய் அதுவும் சமனில் முடிந்து, பின்பு பவுண்டரிகளின் எண்ணிக்கையில் இங்கிலாந்து உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. அந்த ஆட்டத்திலும், சூப்பர் ஓவரிலும் இறுதிவரை நின்று இங்கிலாந்து முதன் முறையாக 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். கிரிக்கெட் உலகில் நியூசிலாந்து, இங்கிலாந்து கிரிக்கெட் இரசிகர்கள் தாண்டி, பலநாட்டு கிரிக்கெட் இரசிகர்களாலும் எளிதில் மறக்க முடியாத போட்டியின் கதாநாயகன் பென் ஸ்டோக்ஸ்!

இவர் சற்று முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் இரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிவிப்பில் தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்து இருக்கிறார். 101 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் பென் ஸ்டோக்ஸ் 2,871 ரன்களும், மூன்று சதமும், 21 அரைசதங்களும் அடித்திருக்கிறார். 74 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு அதிகப்படியான பணிச்சுமையால் மனச்சோர்வு உருவாவதாகக் கூறி சர்வதேச போட்டிகளில் இருந்து கால வரையறை இன்றி ஓய்வில் இருந்து மீண்டும் திரும்பினார் என்பது குறிப்பிடதக்கது!

இந்த முடிவு பற்றி பென் ஸ்டோக்ஸ் கூறும் பொழுது “மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் என்னால் நீடிக்க முடியவில்லை. என் உடலால் ஒத்துழைக்க முடியவில்லை என்பதை உணர்கிறேன். மேலும் இன்னொரு வீரருக்கு வழங்கப்பட வேண்டிய இடத்தில் நான் தொடர்வதாகவும் உணர்கிறேன். இந்த முடிவை எடுப்பது கடினமானது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் என்னாலலான முழுவதையும் கொடுப்பேன். மேலும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் புத்துணர்ச்சியோடு செயல்படவும் உதவும்” என்று தெரிவித்திருக்கிறார்!