தூர்தர்ஷன் டிவியில் கிரிக்கெட் பார்ப்பது பழைய நினைவுகளை கிளறுகிறது – ரவி அஷ்வின் நெகிழ்ச்சி டிவீட்

0
120
Ravichandran Ashwin about IND vs WI ODI Series

இங்கிலாந்து அணியுடன் ஒருடெஸ்ட், மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களை முடித்துக்கொண்டு இந்திய அணி மான்ஸ்செஸ்டரில் இருந்து கடந்த செவ்வாய் கிழமை, தனியார் வாடகை விமானம் மூலம் வெஸ்ட் இன்டீஸ் நாட்டிற்குப் பறந்தது!

அங்கு வெஸ்ட் இன்டீஸ் அணியோடு மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டி தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட, ஷிகர் தவான் தலைமையில் அணி அறிவிக்கப்பட்டது!

இந்த மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று டிரினாடாட் டொபாக்கோ, போர்ட் ஆப் ஸ்பெயினின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. மற்ற இரண்டு போட்டிகளும் இதே மைதானத்தில் வருகின்ற 22, 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இந்தியா வெளிநாடுகளில் விளையாடும் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் வாங்கி வைத்திருந்தது. ஆனால் வெஸ்ட் இன்டீசில் நடக்கும் 150 சர்வதேச போட்டிகள் மற்றும் 250 உள்நாட்டு போட்டிகளை ஒளிப்பரப்பும் உரிமையை பேன்கோட் நிறுவனம் வாங்கி வைத்திருக்கிறது.

இந்த பேன்கோட் நிறுவனம் ஆன்லைனில் ஒளிபரப்பும் வசதிகளை மட்டுமே வைத்திருக்கிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் வசதிகள் கிடையாது. எனவே அந்தந்த நாடுகளில் இருக்கும் பிரதான தொலைக்காட்சி நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்ளும்.

இந்தவகையில்தான் வெஸ்ட் இன்டீஸ் உள்நாட்டில் விளையாடும் போட்டிகள் வெளிநாடுகளில் ஒளிபரப்பாகி வந்தன. இந்த முறை இந்தத் தொடரில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும், இந்தியாவில் ஒளிபரப்ப, தூர்தர்சன் நிறுவனத்தோடு பேன்கோட் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

தூர்தர்சனில் கடைசியாக இந்திய அணி விளையாடிய கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகி 15 வருடங்கள் ஆகிறது. அதற்குப் பிறகு இப்பொழுதுதான் ஒளிபரப்பாகிறது. இதைப்பற்றி இந்திய அணியின் பிரபல வீரர் ஆர்.அஷ்வின் ட்வீட் செய்திருக்கிறார். அந்த ட்வீட்டில் “நான் தூர்தர்சனில் கிரிக்கெட் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. தற்பொழுது பார்க்க, அது பழைய நினைவுகளை கிளறிவிட்டிருக்கிறது. சுப்மன் கில் மற்றும் இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார். சுப்மன் கில் இன்றைய போட்டியில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி இருக்கிறார்!