திக் திக் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து ; வெளியேறுகிறது ஆஸ்திரேலியா!

0
888
T20wc22

எட்டாவது டி20 உலகக் கோப்பையில் இன்று மிக முக்கியமான ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெல்லும் பட்சத்தில் அரை இறுதிக்கு முன்னேறும் தோற்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும் என்ற சூழல் நிலவியது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதென தீர்மானித்தார். இதன்படி களமிறங்கிய பதும் நிசங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் மிகச் சிறப்பான துவக்கத்தை தந்தார்கள். நான்கு ஓவர்களுக்கு 39 ரன்கள் எடுத்த நிலையில் குஷால் மெண்டிஸ் 14 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பவர் பிளே முடிவில் இலங்கை அணி 54 ரன்களை ஒரு விக்கெட்டுகள் இழப்பிற்கு எடுத்து இருந்தது. இந்த முறை சிட்னி ஆடுகளம் சுழற் பந்துக்கும் மெதுவான பந்துக்கும் மிகவும் சாதகமாக இருந்தது. இதனால் 14 ஓவர்களில் இலங்கை அணியால் மேலும் ஏழு விக்கட்டுகளை இழந்து 87 ரன்கள் மட்டுமே திரட்ட முடிந்தது. 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியின் பதும் நிசங்கா 45 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர் உடன் 67 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் மூன்று ஓவர்கள் பந்துவீசி 26 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகளை மார்க் வுட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கு நிகழ்ந்த மாதிரியே தான் நிகழ்ந்தது. ஆனால் இங்கிலாந்து அணி பவர் பிளேவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பில்லாமல் 70 ரன்கள் குவித்தது. ஆனால் இங்கிலாந்து அணி இந்த இலக்கை இறுதியில் இரண்டு பந்துகள் மீதம் வைத்துதான் எட்டியது. அந்த அளவிற்கு பவர் பிளே முடிந்து ரன் அடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் துவக்க ஆட்டக்காரர்கள் அலெக்ஸ் ஹேலஸ் 30 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். பொறுமையாக விளையாடினாலும் இறுதிவரை களத்தில் நின்று பென் ஸ்டோக்ஸ் 36 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா நான்கு ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற, ஆஸ்திரேலியா அணி தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது. தனது குழுவில் இரண்டாம் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து அணியை, தனது குழுவில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ள இந்திய அணி சந்திக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ஒருவேளை இந்திய அணியின் ஆட்டம் மழையால் தடைபட்டு, தென் ஆப்பிரிக்க அணி நாளை நெதர்லாந்து அணியை வீழ்த்தும் பட்சத்தில், இந்திய அணி தனது குழுவில் இரண்டாம் இடம் பெற்று, தனது குழுவில் முதலிடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணியைச் சந்திக்கலாம். இதையெல்லாம் விட முக்கியமாக இந்திய அணி நாளை ஜிம்பாப்வே அணியை வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!