” அட.. அவரு எங்கப்பா ? ” விண்டீஸ் டி20 தொடரில் ராகுல் பங்கேற்பாரா ? பிசிசிஐ வெளியிட்ட வீடியோவால் எழுந்த பிரச்சினை

0
26
KL Rahul Ind vs Wi series

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் கேஎல் ராகுல் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்ட வீடியோவால் எழுந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் போட்டி தொடர் முடிவுற்ற பிறகு, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 29ஆம் தேதி துவங்குகிறது. ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. மூன்றாவது போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றுவதற்கு கேப்டன் தவான் முழு முனைப்புடன் இருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து நடைபெறவிருக்கும் டி20 தொடரில் பங்கேற்பதற்கு முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பண்ட், புவனேஸ்வர் குமார், குல்திப் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் அறைக்கு வந்திறங்கிய வீடியோ பதிவினை பிசிசிஐ அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் வெளியிட்டது.

கொரோனா தொற்று காரணமாக ஒருநாள் தொடரில் இடம்பெற்று திடீரென விலகிய கே எல் ராகுல், டி20 தொடர் துவங்குவதற்கு ஒரு வாரம் முன்பாகவே குணமடைந்துவிட்டார். டி20 தொடரில் நிச்சயம் இணைவார் என்று கருதப்பட்டது. இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்ட வீடியோ பதிவில் கே எல் ராகுல் இடம்பெறாததால் அவர் தொடரில் இருந்து விலகி விட்டாரா? அவரது காயம் மற்றும் கொரோனா தொற்று நிலைமை எப்படி இருக்கிறது? என்பது குறித்து வீடியோ பதிவின் கீழே உள்ள கமெண்ட்-இல் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது குறித்து பிசிசிஐ தரப்பு இன்னும் ஓரிரு நாட்களில் அறிக்கையை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

கே எல் ராகுல், ஐபிஎல் தொடர் முடிவுற்ற அடுத்து சில தினங்களில் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஜெர்மனி சென்றிருந்தார். அறுவை சிகிச்சை நடந்து முடிந்தவுடன் பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். முழுமையாக குணமடையததால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவரால் இடம்பெற முடியவில்லை.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டது. திடீரென வந்த கொரோனா தொற்று காரணமாக அவர் விலகிவிட்டார். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டாலும், டி20 தொடரில் பங்கேற்கவந்த வீரர்கள் மத்தியில் அவர் தென்படவில்லை. நிச்சயம் இன்னும் காயம் குணமடையவில்லை என்று தெரிகிறது.

டி20 உலகக்கோப்பை தொடர் மற்றும் அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடர் என வரிசையாக மிகப்பெரிய ஐசிசி தொடர்கள் வரவிருக்கிறது. இதற்கிடையில் கே எல் ராகுல் இன்னும் குணமடையாமல் இருப்பது இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் வரிசையில் சற்று பின்னடைவை தந்திருக்கிறது.