ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் என பேட்ஸ்மேன்கள் கட்டுப்பாடு இல்லாமல் ஆடுவது நியாமற்றது ; விதிகளை மாற்ற வேண்டும் – ரவி அஷ்வின் கருத்து

0
135
Ravichandran Ashwin about switch hit shot

இந்திய அணியில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஆர்.அஷ்வின் இருக்கிறார்!

ஐ.பி.எல் தொடரின் சென்னை அணியின் கண்டுபிடிப்பு அஷ்வின் என்று கூறலாம். முதன் முதலில் இலங்கை அணிக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். பின்பு அதே ஆண்டு அதே மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகம் ஆனார். பின்பு 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் நவம்பரில் அறிமுகம் ஆனார்.

- Advertisement -

தற்போது 35 வயதாகும் ஆப் ஸ்பின்னர் ஆர்.அஷ்வின் எப்பொழுதும் தனது பந்துவீச்சில் புதிதாய் ஏதாவது முயற்சி செய்துகொண்டே இருப்பார். ஆனால் அந்த முயற்சிகளை முன்பே பலமுறை பயிற்சி செய்திருப்பார். அந்தளவிற்குத் தன் முனைப்பான அர்ப்பணிப்பான வீரர் அஷ்வின்.

அதேபோல் தற்போது ஐ.சி.சி விதியில் ரன்-அவுட் என்று பெயர் மாற்றப்பட்டிருக்கும் மன்கட் அவுட் முறையைப் பயன்படுத்தி ஐ.பி.எல் தொடரில் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்திருந்தார். அது அப்பொழுது பெரிய அளவில் சர்ச்சை ஆனது. ஆனால் அஷ்வின் எந்த எதிர்ப்புக்கும் பயப்படவில்லை. தான் செய்தது சரியென்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக அவர் கூறிய காரணங்களும் ஏற்புடையதாகவே இருந்தது. அதற்கேற்றார் போல் மன்கட் முறையை ரன் அவுட் என்றும், அது போட்டி உணர்வுக்கு எதிரானது இல்லையென்றும் ஐ.சி.சி அறிவித்து இருக்கிறது.

தற்பொழுது அஷ்வின் மிக முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். என்னவென்றால்; பேட்ஸ்மேன்கள் ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஆடும் பொழுது, பந்தை தவறவிட்டு, பந்து காலில் பட்டால், பந்து எந்தப்பக்கம் பிட்ச் ஆகியிருந்தாலும் ஸ்டம்பில் படுமென்றால் எல்.பி.டபிள்யூ தரவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

பந்து பேட்ஸ்மேனின் இடது புறம் (லெப்ட்) பட்டு வந்து காலில் மோதினால் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் தரப்படாது. காரணம் பேட்ஸ்மேனின் பார்வை பகுதி வலப்புறம்தான் (ரைட்). ஆனால் ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் அடிக்க பேட்ஸ்மேன்கள் திரும்பும் பொழுது, அவர்களின் பார்வை பகுதியும் மாறுகிறது. இதனால் அப்படி ஆடி பந்தை தவறவிட்டு, பந்து காலில் பட்டு, அது ஸ்டம்பை தாக்குமென்றால் எல்.பி.டபிள்யூ தரவேண்டுமென்று அஷ்வின் கூறியிருக்கிறார்!