டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
5359

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரூபெல் ஹுசைன்.

வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரூபெல் ஹுசைன், தனது பேஸ்புக் பக்கத்தில், “வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்கப் போகிறேன் என்று துவங்கி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தனது பேஸ்புக் பதிவில்,

“நான் உங்களிடம் சில விஷயங்களை கூற வேண்டும். இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறேன். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து, அதற்கான கடிதத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பிவிட்டேன். டெஸ்ட் போட்டிகளில் வலுப்பெற்று இருக்கும் அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் வலுப்பெற்ற அணியாக காணப்படும். அந்த வகையில் இளம் வீரர்களுக்கு அணியில் நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்கிற கோணத்தில் நான் இந்த ஓய்வு முடிவை எடுத்திருக்கிறேன்.

தற்போது வங்கதேசம் அணி பல இளம் வீரர்களை உருவாக்கி வருகிறது. அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டு பல்வேறு டெஸ்ட் தொடர்களை வெல்ல வேண்டும். எனது வாழ்க்கையின் கடினமான முடிவாக இதை உணர்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.

2009 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ரூபெல் ஹுசைன், இந்த 13 ஆண்டுகளில் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 36 விக்கெட் களையும் கைப்பற்றி இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவருக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. கடைசியாக 2020 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் விளையாடினார். அதிகபட்சமாக 166 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் கைப்பற்றி இருக்கிறார். இவர் எடுத்த ஒரேயொரு ஐந்து விக்கெட் இதுவாகும்.

இது பற்றியும் தனது ஓய்வு முடிவு கடித்ததில் எழுதியிருக்கும் அவர், “வங்கதேச அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதை மிகப்பெரிய சாதனையாக நான் பார்க்கிறேன்.” என குறிப்பிட்டிருந்தார்.

“இந்த பயணத்தில் எனக்காக உறுதுணையாக நின்ற எனது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இதுவரை எனக்கு கொடுத்து வந்த ஆதரவை இனிமேல் வரும் காலங்களிலும் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் நான் இன்னும் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பங்களிக்க சில காலம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.” என குறிப்பிட்டிருந்தார்.

லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடுவேன் என்று உறுதி கொடுத்த அவர், “நான் டாக்கா பிரிமியர் லீக் மற்றும் வங்கதேச பிரிமியர் லீக் ஆகிய தொடர்களில் எனது அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன்.” என்றும் கூறினார்.