பாபர்-ரிஸ்வான் உலக சாதனை டி20 பார்ட்னர்ஷிப் ; பாபர் அதிரடி சதம் ; பாகிஸ்தான் அபார வெற்றி!

0
1093
Baber-Rizwan

இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருந்தது.

இதையடுத்து இன்று இந்தத் தொடரில் இரண்டாவது போட்டி கராச்சி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மொயின் அலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு துவக்கம் தர களமிறங்கிய அலெக்ஸ் ஹேலஸ் மற்றும் பில் சால்ட் இருவரும் ஓரளவு சிறப்பான துவக்கம் தந்தார்கள். ஆனால் பவர் பிளேவின் கடைசி ஓவரில் ஷானவாஸ் தகாணி அலெக்ஸ் ஹேலஸ் மற்றும் டேவிட் மலான் இருவரையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.

இதற்கு அடுத்து களமிறங்கிய பென் டெக்கட் 43(22), ஹாரி ப்ரூக் 31(19) மொயின் அலி 55 (23) என்று அதிரடியான பங்களிப்பைத் தர, 20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 199 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ரவுப் 4 ஓவர்கள் பந்துவீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க ஜோடி பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் முதல் பத்து ஓவர்களுக்கு 87 ரன்கள் எடுத்து ஒரு அடித்தளம் அமைத்துக் கொண்டார்கள். ஆனால் அதற்குப் பிறகு அணியின் கேப்டன் பாபரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. 10 ஓவர்கள் முடிவில் 31 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த பாபர் 17.5 ஓவர்களில் 61 பந்துகளில் 100 ரன்களை எட்டி, டி20 கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். அத்தோடு ஆசிய கோப்பையில் ஜொலிக்காது போனதற்கான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய முகமது ரிஸ்வான் 88(51) அரை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி விக்கெட் விடாமல் 203 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தது. இதுதான் ஒரு துவக்க ஜோடியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் டி20 கிரிக்கெட்டில் ஆகும். இதற்கு முன் இதே ஜோடிதான் தென் ஆப்பிரிக்க அணியுடன் 197 ரன்கள் எடுத்து உலகச் சாதனை செய்திருந்தது. தற்போது தங்கள் சாதனையை தாங்களே உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 7 போட்டிகள் கொண்ட இந்த தொடர் தற்போது 1-1 என சமநிலையில் இருக்கிறது.