பாபர் ஆஸமின் முதலிடம் பறிபோனது ; யார் முதலிடம்? – வெளியானது டி20 பேட்ஸ்மேன் ஐசிசி ரேங்க் பட்டியல்!

0
527
T20i

நடப்பு 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாதிக்குமேல் தாண்டி இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இதை அடுத்து ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

நடந்து கொண்டிருக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் 133 ரன்கள், விராட் கோலி 154 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். இதில் சூரியகுமாரின் ஸ்டிரைக் ரேட் 160.24 என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குர்பாஷ் மூன்று ஆட்டங்களில் 135 ரன்களை 166.66 ஸ்டிரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். இவரது ஸ்ட்ரைக் ரேட்தான் இந்தத் தொடரில் அதிகம்.

- Advertisement -

அதே சமயத்தில் ஹாங்காங் மற்றும் இந்திய அணியோடு 70+ ரன்களை குவித்த பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான், தனது ஓபனிங் பார்ட்னர் மற்றும் கேப்டனை முதலிடத்தில் இருந்து பின்னுக்குத்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். பாபர் இரண்டாவது இடத்தில் தொடர்கிறார். மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்கம் இருக்கிறார். சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு சரிந்து இருக்கிறார்.

விராட் கோலி டி20 பேட்ஸ்மேன்களுக்கான முதல் இடத்தில் ஆயிரம் நாட்களுக்கு மேல் இருந்து சாதனை படைத்தார். அந்தச் சாதனையை உடைத்து பாபர் ஆசம் ஆயிரம் நாட்களை கடந்து இருந்தார். தற்பொழுது அந்த சாதனைக்கு முஹம்மது ரிஸ்வான் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். பாபரின் சாதனை 1,155 நாட்களோடு முடிவுக்கு வருகிறது. டி20 போட்டிகளில் மிஸ்பா உல் ஹக் மற்றும் பாபருக்கு அடுத்து மூன்றாவதாக முதல் இடத்திற்கு முன்னேறும் பேட்ஸ்மேன் ரிஸ்வான் ஆவார்.

நேற்று இலங்கை அணியுடன் 74 ரன்கள் குவித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4 இடங்கள் முன்னேறி 13 இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தான் அணியுடன் 60 ரன்கள் குவித்த விராட் கோலி 4 இடங்கள் முன்னேறி 29வது இடத்தில் தொடர்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் 8 இடங்கள் முன்னேறி 50-வது இடத்தில் இருக்கிறார். அர்ஸ்தீப் சிங் 28 இடங்கள் முன்னேறி 62 இடங்களில் இருக்கிறார்.

- Advertisement -

சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியுடன் மோதிய போட்டியில் 20 பந்துகளில் 42 ரன்கள் குவித்த முகமது நவாஸ் 142 இடங்கள் முன்னேறி 358வது இடத்தில் இருக்கிறார். நேற்று இந்தியாவுடன் அரைசதம் அடித்த நிஷாங்க ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்திலும், அவருடன் சேர்ந்து அரைசதமடித்த குசால் மெண்டிஸ் 63 இடங்கள் முன்னேறி 41 இடங்களில் இருக்கிறார்.

இலங்கை அணியின் கேப்டன் டசன் சனகா 11 இடங்கள் முன்னேறி 39 ஆவது இடத்தில் இருக்கிறார். அந்த அணியின் ராஜபக்சே 31 இடங்கள் முன்னேறி 68 ஆவது இடத்தில் இருக்கிறார். அதே சமயத்தில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷன ஐந்து இடங்கள் முன்னேறி முதல் பத்து இடங்களுக்குள் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்!