விராட் கோலிக்கு ஆதரவாக ட்வீட் செய்தது ஏன் ? பாபர் ஆசம் விளக்கம் !

0
24
Virat Kohli and Babar Azam

தற்போது உலக கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரிய விசயம் விராட் கோலியின் பேட்டிங் பார்ம்தான். பல முன்னாள் பிரபல வீரர்களில் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் குறித்தும், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசாதவர்கள் மிக சொற்பமானவர்கள் என்றே கூறலாம். அந்தளவிற்கு விராட் கோலியின் பேட்டிங் பார்ம் இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தாண்டி விவாதிக்கப்படுகிறது!

இதன் தீவீரத்தன்மையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால், கிரிக்கெட்டில் மட்டுமல்லாது, வரலாறு, அரசியலாகவும் நேரெதிராக நிற்பது இந்தியா, பாகிஸ்தான் நாடுகள். இப்படியிருக்க நேற்று இரவு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன், தான் விராட் கோலியோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அதில் “இதுவும் கடந்து போகும். வலிமையாக இருங்கள் விராட் கோலி” என்று தலைப்பிட்டு, விராட் கோலிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். இது இன்றுவரை சமூக வலைத்தளங்களில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது!

மேலும் நேற்று இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில், துவக்கத்தில் சிறப்பாக ஆரம்பித்து ஆனால் அடுத்து டேவிட் வில்லியின் சாதாரண பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். இந்த நிலையில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோஸ் பட்லரும் விராட் கோலிக்கு ஆதரவாக “அவர் ஒருநாள் போட்டியில் உலகின் மிகச்சிறந்த வீரர். அவர் இந்திய அணிக்காகப் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர். அவர் மீதான விமர்சனங்களை ஏற்க முடியாது” என்று பேசியிருந்தார். இப்படி எல்லோராலும் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் பற்றி பேசப்பட்டு வருகிறது.

தற்போது பாகிஸ்தான் அணி இலங்கைக்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சென்றிருக்கிறது. இதில் முதலில் இலங்கை கிரிக்கெட் லெவனோடு மூன்று நாட்கள் பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் விளையாடியது. இந்தத் தொடரின் முதல் போட்டி வருகின்ற 16 ஆம் தேதி காலே மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் ஜூலை 24ஆம் தேதியும் நடக்க இருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் விராட் கோலிக்கு ஆதரவாகக் கருத்து இட்டிருந்தது ஏன் என்று தெரிவித்திருக்கிறார். அதைப் பற்றி அவர் கூறும் பொழுது “ஒரு வீரராக பேட்டிங் பார்ம் இல்லாத காலக்கட்டத்தை கடப்பதை பற்றி எனக்குத் தெரியும். இப்படியான நேரத்தில் ஒரு வீரர் எப்படி இருப்பார் என்றும் தெரியும். இந்த நேரத்தில் அவருக்கு ஆதரவு தேவை. என் ட்வீட் அவருக்கு ஒரு ஆதரவை தரும் என்று ட்வீட் செய்தேன். விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர். அவர் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறார். அவருக்கு இதிலிருந்து எப்படி வெளியே வருவது என்றும் தெரியும். நீங்கள் இந்த நேரத்தில் அவரை ஆதரிப்பது, நல்லதொரு விசயமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்!