விராட் கோலி ரோகித் சர்மா சாதனையை சமன் செய்த பாபர் ஆஸம்; முத்தரப்பு தொடரில் அசத்தல்!

0
794
Babarazam

நியூசிலாந்து நாட்டில் பாகிஸ்தான் பங்களாதேஷ் நியூசிலாந்து பங்குபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இன்று இரண்டாவது போட்டி க்றைஸ்ட்சர்ச் மைதானத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்வதெனத் தீர்மானித்தார்.

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பின் ஆலன் 13(8), டெவோன் கான்வோ 36(35) ரன்களில் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 30(31), கிளன் பிலிப்ஸ் 18(17), மார்க் சாப்மேன் 32(16) ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ரவுப் 4 ஓவர்கள் பந்துவீசி இருபத்தி எட்டு ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து களமிறங்கிய பாகிஸ்தானின் ரிஸ்வான், பாபர் ஜோடி இந்தமுறை சீக்கிரத்தில் பிரிந்தது. ரிஸ்வான் சீக்கிரத்தில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஷான் மசூத் அவரும் உடனே வெளியேறினார். இதையடுத்து பாகிஸ்தான் அணி தடுமாறும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இறக்காமல், ஆல்ரவுண்டர்களான சதாப் கான் மற்றும் முகமது நவாஸ் இருவரையும் இறக்கியது. இவர்கள் இருவரும் தலா 34, 16 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் வெற்றி எளிதானது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 53 பந்துகளில் 79 ரன்களை 11 பவுண்டரிகளுடன் அடித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பாகிஸ்தான் அணியை வெற்றிபெற வைத்து ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

பாபர் ஆசம் இந்த அரைசதம் டி20 கிரிக்கெட்டில் அவரது 28வது அரைசதம் ஆகும். இதை தனது 81 வது இன்னிங்சில் அடித்திருக்கிறார். இதேபோல் டி20 இருபத்தி எட்டாவது அரைசதத்தை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 81 ஆவது இன்னிங்சில்தான் அடித்து இருந்தார்கள். தற்போது இந்த சாதனையை பாபர் ஆசம் சமன் செய்து இருக்கிறார். மேலும் இலக்கைத் துரத்தும் போது டி20 கிரிக்கெட்டில் பாபருக்கு இது 12வது அரைசதம் ஆகும். ரன் துரத்தலின் போது ரோகித் சர்மா 12 அரைசதங்கள் டி20 கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு முன்னால் 19 அரைசதம் அடித்து விராட் கோலி இதில் முன்னணியில் இருக்கிறார்!