பாபர் அசாம் சதம் : யாருமே படைக்காத உலக சாதனையை நிகழ்த்தியுள்ள பாகிஸ்தான் கேப்டன்

0
356
Babar Azam

வெஸ்ட் இன்டீஸ் அணி நெதர்லாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று, மூன்று ஆட்டங்களையும் வென்று நெதர்லாந்து அணியை வொய்ட் வாஷ் செய்துவிட்டு, அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க பாகிஸ்தானிற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது!

இந்தத் தொடரின் முதல்போட்டி நேற்று முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் டாஸில் வென்ற வெஸ்ட் இன்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் வெஸ்ட் இன்டீஸ் அணி முதலில் பேட் செய்யும் என அறிவித்தார். பாகிஸ்தான் தரப்பில் மொகம்மத் ஹாரிஸ் என்ற வீரர் அறிமுகம் ஆனார்!

- Advertisement -

வெஸ்ட் இன்டீஸ் அணியின் துவக்க ஜோடியில் கைய்ல் மேயர்ஸை ஷாகின் ஷா அப்ரிடி வெளியேற்ற, மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஷாய் கோப், அடுத்து வந்த ஷாமார் ப்ரூக்ஸ் உடன் இணைந்து 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 70 ரன்களில் ப்ரூக்ஸ் வெளியேற, ஷாய்கோப் சதமடித்து 127 வெளியேறினார். 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 305 ரன்களை வெஸ்ட் இன்டீஸ் அணி எடுத்தது.

அடுத்து 306 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்களில் பகார் ஜமான் 11 ரன்களில் வெளியேறினார், அடுத்து வந்த கேப்டன் பாபர் ஆசம் மற்றொரு துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக்குடன் இணைந்து 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 65 ரன்களில் இமாம் உல் ஹக் வெளியேற, அடுத்த வந்த மொகம்மத் ரிஸ்வான் உடனும் இணைந்து 108 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு சதமும் அடித்தார் பாபர் ஆசம். இதையடுத்து பாபர் ஆசம் 103, மொகம்மத் ரிஸ்வான் 59 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணிக்கு கடைசி ஐந்து ஓவர்களில் 48 ரன்கள் தேவைப்பட்டது. பாகிஸ்தானின் பேட்டிங் வரிசையில் ஐந்தாவதாய் களமிறங்கிய குஷ்தில் ஷா ஒரு பவுண்டரி, நான்கு சிக்ஸர்களோடு 23 பந்தில் 41 ரன்கள் விளாசி, இறுதிவரை களத்தில் நின்று பாகிஸ்தான் அணியை வெற்றிபெற வைத்தார். இவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் பாபர் ஆசம் அடித்த சதம் அவரது 17வது ஒருநாள் போட்டி சதமாகும். மேலும் இது தொடர்ச்சியான மூன்றாவது சதமாகும். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இது இவருக்கு இரண்டாவது தொடர்ச்சியான மூன்றாவது சதமாகும். ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் செய்யாத உலகசாதனையாகும் இது.

- Advertisement -

2016ஆம் வெஸ்ட் இன்டீசிற்கு எதிராக ஷார்ஜாவில் 120, 123, அபுதாபியில் 117 என தொடர்ச்சியாய் மூன்று சதங்கள் விளாசி இருந்தார்.
இதற்கடுத்து இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லாகூரில் 105 நாட் அவுட், 114 என இரண்டு சதங்கள் அடித்திருந்தார். தற்போது முல்தானில் வெஸ்ட் இன்டீசிற்கு எதிராய் இந்த ஆட்டத்தில் 103 ரன்கள் விளாசியதின் மூலம் ஒருநாள் போட்டியில் இரண்டுமுறை தொடர்ச்சியாய் மூன்று சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் படைத்திருக்கிறார்!