லக்னோ வீரர் அபார ஆட்டம் – 15 வருட ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறை அறிமுக வீரரால் படைக்கப்பட்ட சாதனை

0
3012
Ayush Badoni

ஐ.பி.எல்-ன் 15 வது சீசன் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து களைக்கட்டியிருக்கிறது. விடுமுறை நாட்களான சனி, ஞாயிறில், பெரியளவு இரசிகர்களைக் கொண்ட சென்னை, மும்பை, அணிகளுக்கு ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்க, மூன்று அணிகளுமே தங்களின் முதல் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியிருக்கின்றன!

வேலை நாளான திங்கள் கிழமை இன்று ஐ.பி.எல்-க்கு புதிய அணிகளான கே.எல்.ராகுல் கேப்டனாய் உள்ள லக்னோ அணியும், ஹர்திக் கேப்டனாய் உள்ள குஜராத் அணிகளும் விளையாடி வருகிறது. டாஸில் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் லக்னோவை பேட் செய்ய அழைக்க, லக்னோவின் ஆட்டத்தை ஆரம்பிக்க துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுலும் விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக்கும் களமிறங்கினர்.

- Advertisement -

ஆட்டத்தின் ஷமி வீசி முதல் பந்திலேயே லக்னோ அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லக்னோ அணியின் கேப்டன் விக்கெட் கீப்பர் மேக்யூ வேட் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தனது இரண்டாவது ஓவரில் குயின்டன் டிகாக்கையும், மூன்றாவது ஓவரில் மனிஷ் பாண்டேவையும் க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் ஷமி. இடையில் வருண் ஆரோன் எவின் லீவீஸ் விக்கெட்டை கைப்பற்றி இருக்க லக்னோ அணி 29/4 என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது!

அப்பொழுது அறிமுக வீரர் டெல்லியைச் சேர்ந்த 22 வயதான ஆயுஷ் பதோனி களமிறங்கி தீபக் ஹூடாவுடன் இணைந்தார். ஒருபுறத்தில் விக்கெட் சரிந்திருந்தாலும் தீபக் ஹூடா அதைப்பற்றி கவலைப்படாமல் அதிரடி காட்ட ஆரம்பித்தார். தீபக் ஹூடா அடித்து ஆட உதவியாய் ஆடிவந்த அறிமுக வீரர் பதோனியும் ஹர்திக் ஓவரில் அட்டகாசமாக 6, 4, 4 என்று வெளுக்க, வீழ்ந்த லக்னோ எழ ஆரம்பித்தது.

மிகச்சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா அரைசதமடித்து 55 [41] ஆட்டமிழக்க, மறுமுனையில் தீபக் ஹூடாவின் பொறுப்பையும் சேர்த்து எடுத்துக்கொண்ட அறிமுக வீரர் பதோனி சிறப்பாகத் தொடர்ந்து ஆடினார். குறிப்பாக மணிக்கு 147 கி.மீ வேகத்தில் பெர்குசன் வீசிய பந்தில் அனாசயமாக சிக்ஸர் விளாசி பிரமிக்க வைத்தார். இறுதியாக அரைசதமடித்து 54 [41] என்று அவர் ஆட்டமிழக்க, லக்னோ 158/6 என்று சண்டையிடும் அளவிற்கான ஸ்கோரை பெற்றது.

- Advertisement -

15 வருட ஐ.பி.எல் வரலாற்றில் ஆறாவது வீரராய் அறிமுக வீரர் ஒருவர் களமிறங்கி அரைசதமடிப்பது இதுதான் முதல் முறை!