இரண்டாவது ஓடிஐ போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி; 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது இந்திய அணி!

0
37
IndvsAus

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. இதை அடுத்து இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை தோற்கடித்தது!

இதற்கடுத்து இன்று இரண்டாவது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் பங்கேற்காத கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டிக்கு திரும்பி வந்தார். இந்திய அணியில் ஒரு மாற்றமாக சர்துல் தாகூருக்கு பதில் அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியா அணியில் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலீஷ்க்கு பதில் அலெக்ஸ் ஹேரி கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். கடந்த ஆட்டத்தில் அபார வேகப்பந்து வீச்சின் மூலம் பிரச்சனையை கொடுத்த மிட்சல் ஸ்டார்க் இந்த ஆட்டத்திலும் அதை அப்படியே தொடர்ந்தார். முதல் ஓவரிலேயே சுப்மன் கில் முதல் போட்டியில் ஆட்டம் இழந்ததைப் போலவே ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து ஸ்டார்க்கின் பந்து வீச்சில் 13 ரன்னில் கேப்டன் ரோஹித் சர்மா வெளியேறினார். கடந்த ஆட்டத்தைப் போலவே இந்த ஆட்டத்திலும் தான் சந்தித்த முதல் பந்திலேயே சூரியகுமார் யாதவ் கோல்டன் டக் அடித்து வெளியேறினார்.

கடந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் இந்த முறை ஒன்பது ரன்னில் ஸ்டார்க்கால் வீழ்த்தப்பட்டார். ஹர்திக் பாண்டியா கேப்டன் ஸ்மித் பிடித்த அபார கேட்ச்சால் ஆட்டம் இழந்தார். பத்து ஓவர்களுக்குள் 49 ரன்களுக்கு இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து விராட் கோலி 31 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 16 ரன்கள், அக்சர் படேல் 29 ரன்கள் என எடுத்து வெளியேற இந்திய அணி 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்தியாவில் வைத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணியின் மிகக் குறைந்த ஒருநாள் கிரிக்கெட் ஸ்கோர் இது. மிட்சல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி ஐந்து விக்கட்டுகளை கைப்பற்றினார். நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகள் மற்றும் சீன் அப்பாட் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி விளையாட இது இந்திய அணி விளையாடிய ஆடுகளமா என்கின்ற பெரிய சந்தேகம் எழும் அளவுக்கு அடித்து நொறுக்கியது. வெறும் பதினொரு ஓவர்கள் மட்டுமே விளையாடி இந்தியா நிர்ணயத்த இலக்கை மிகச் சுலபமாக எட்டிப் பிடித்தது.

துவக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட டிராவிஸ் ஹெட் 30 பந்தில் 10 பவுண்டரிகள் உடன் 51 ரன்களை குவித்து ஆட்டம் இழக்காமலும், மிட்சல் மார்ஷ் 36 பந்துகளில் ஆறு பவுண்டரி ஆறு சிக்ஸர்கள் உடன் 66 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல வைத்தார்கள். இதன் மூலம் தற்பொழுது தொடர் 1-1 என சமநிலையை எட்டி இருக்கிறது. தொடரை யாருக்கு என முடிவு செய்யும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இரண்டு நாட்கள் கழித்து சென்னையில் நடக்க இருக்கிறது.