ஏசியன் கேம்ஸ்.. ருதுராஜ் இந்திய அணிக்கு தங்கப்பதக்கம்.. விளையாடாமலே கிடைத்தது எப்படி?.. முழு தகவல்கள் இதோ!

0
3621
ICT

தற்பொழுது சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 வடிவத்தில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு அணிகள் அனுப்பி வைக்கப்பட்டது.

முதலில் நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட் தொடரில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி இறுதி போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்த நிலையில் ருதுராஜ் தலைமையிலான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நேரடியாக கால்இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று நேபாள் அணியை வென்று, அரை இறுதியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று ஆப்கானிஸ்தான் அணியை சந்தித்தது.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த ஆட்டம் போலவே இந்த ஆட்டத்திலும் ஒரு பிரதான வேகப்பந்துவீச்சாளரை மட்டுமே வைத்து சென்றது.

இந்த நிலையில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்த பொழுது மழை குறுக்கிட்டது. ஷாகிதுல்லா 49, கேப்டன் குல்பதின் நைப் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் மேற்கொண்டு ஆட்டம் தொடர்வதற்கு மழை விடவில்லை. தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே இருந்தது. மற்ற நாடுகளைப் போல மழையில் இருந்து ஆடுகளத்தை பாதுகாத்து, மைதானத்தை உலர வைப்பதற்கான வசதிகள் சீனாவில் இல்லை.

இதன் காரணமாக தொடர்ந்து ஈரமான மைதானத்தில் விளையாட முடியாது என்பதால் போட்டி கைவிடப்பட்டது. போட்டி கைவிடப்பட்டாலும் புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்று இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருக்கிறது. மேலும் வெண்கல பதக்கத்திற்கு நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று பங்களாதேஷ் வெண்கல பதக்கத்தை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்தியா இந்த முறை மொத்தமாக 100 பதக்கங்களை பெற்று அசத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!