கடைசி ஓவரில் நழுவவிட்ட இந்தியா பாகிஸ்தான் அணி வெற்றி

0
76

சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

15ஆவது ஆசியக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது தற்போது சூப்பர் 4 சுற்றை அடைந்துள்ளது. இரண்டாவது சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் பலப்பரிட்சை மேற்கொண்டன. இந்த இரு அணிகளும் ஏற்கனவே லீக் போட்டியில் மோதின. அதில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியுடன் ஏற்கனவே வென்றிருக்கும் பலத்துடன் இந்திய அணி இப்போட்டியில் களமிறங்கியது.

- Advertisement -

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசிய ரோகித், சர்மா 3 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 16 பந்துகளில் 28 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இவருடன் களமிறங்கிய கேஎல் ராகுல் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 54 ரன்கள் சேர்த்து மிகச் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தது.

மூன்றாவது வீரராக இறங்கிய விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருமுனையில் விக்கெட் இழக்காமல் நின்றார். சென்ற போட்டியில் அசத்திய சூரியகுமார் யாதவ் 13 ரன்கள், ரிஷப் பண்ட் 14 ரன்கள் மற்றும் தீபக் ஹூடா 16 ரன்கள் என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தனர். கடந்த முறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்திய ஹார்திக் பாண்டியா, இம்முறை இரண்டு பந்துகள் மட்டுமே பிடித்து ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். பேட்டிங்கில் கலக்கிய விராட்கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி 181 ரன்கள் எடுத்திருந்தது. சதாப் கான் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்ற நான்கு பவுலர்களும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக களம் இறங்கிய ரிஸ்வான் ஒரு முனையில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நங்கூரம் போல நின்று கொண்டார். பாபர் அசாம் இம்முறையும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. 14 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த பக்கர் ஜமான் 18 பந்துகளுக்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பலாக வெளியேறினார். வழக்கமாக கீழ் வரிசையில் களமிறங்கும் முகமது நவாஸ் இம்முறை சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு மேல் வரிசையில் இறக்கிவிடப்பட்டார். நான்காவது வீரராக களம் இறங்கிய இவருக்கு இன்றைய நாள் ஆட்டம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக அமைந்தது. ரவி பிஸ்னாய், ஹார்திக் பாண்டியா மற்றும் யுஷ்வேந்திர சகல் ஆகியோரின் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக வெளுத்து வாங்கிய இவர், 20 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இதில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.

- Advertisement -

குஷ்தில் மற்றும் ஆசிப் அலி இருவரும் களத்தில் இருந்தனர். பதினெட்டாவது ஓவரை ரவி பிஸ்னாய் வீசினார். அப்போது ஆசிப் அலி தவறுதலாக அடித்ததால் பந்து மேலே சென்றது. எளிதாக பிடிக்க வேண்டிய கேட்சை அர்ஷிதீப் சிங் தவறவிட்டார். இந்த தருணம் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது அதன் பிறகு ஆசிப் அலி ஒரு சிக்சர் மற்றும் பௌண்டரி என அடித்து ஆட்டத்தை முழுவதுமாக பாகிஸ்தான் பக்கம் திருப்பினார். கடைசி இரண்டு ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் தனது அனுபவத்தை போதிய அளவிற்கு பயன்படுத்தவில்லை. 19 ரன்கள் அந்த ஓவரில் விட்டுக் கொடுத்தார்.

கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வெறும் ஏழு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அர்ஷதீப் சிங் அந்த ஓவரை வீசினார். இரண்டாவது பந்தை ஆசிப் அலி பௌண்டரி அடித்து மேலும் இந்திய ரசிகர்களுக்கு பலத்தை இடியை கொடுத்தார். அதன் பிறகு ஆறுதலுக்காக அவரது விக்கெட்டை இந்திய அணி வீழ்த்தினாலும், ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 182 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.