2022 ஆசியக்கோப்பையில் இந்திய அணியோடு மோத இருக்கும் பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

0
333
Pakistan Squad

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆசிய கிரிக்கெட் நாடுகளை வைத்து நடத்தும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை யு.ஏ.இ-ல் நடக்க இருக்கிறது. இந்தத் தொடரில் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உட்பட தகுதி சுற்றில் வெல்லும் ஒரு அணியென ஆறு அணிகளை, இரண்டு குழுவாகப் பிரித்து, அதில் இரண்டு குழுவிலும், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் நான்கு அணிகளை தேர்ந்தேடுத்து, அவர்களுக்குள் மோதவிட்டு, அதில் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகளைக் கொண்டு இறுதிபோட்டியும், அதில் வெல்லும் அணி சாம்பியனாகவும் அறிவிக்கப்படும்!

1984ஆம் ஆண்டு முதல் 14 முறை நடத்தப்பட்டுள்ள ஆசியக்கோப்பை தொடரை பங்களாதேஷ் 5, இலங்கை 4, யு.ஏ.இ 3, இந்தியா 1, பாகிஸ்தான் 1 என நடத்தி இருக்கின்றன. இதில் இந்தியா 7 முறையும், இலங்கை ஐந்து முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் சாம்பியன் ஆகி இருக்கின்றன. அதிக ரன் அடித்தவராக இலங்கையின் சனத் ஜெயசூர்யாவும் 1220 ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக இலங்கையில் லசித் மலிங்காவும் 37 விக்கெட்டுகள் உள்ளனர். 50 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டு வந்த ஆசியக் கோப்பை தொடர் கடந்த முறையிலிருந்து 20 ஓவர் போட்டியாக நடத்தப்படுகிறது!

- Advertisement -

நேற்று ஆசியக் கோப்பைக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது. இதில் ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடக்க இருக்கிறது. இது மட்டும் அல்லாமல், அடுத்த சுற்றான சூப்பர் 4லும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும். இரு அணிகளும் இந்த முறை சிறப்பாகச் செயல்பட்டால், இறுதி போட்டியிலும் மோதலாம். இதன் மூலம் ஒரு தொடரில் இந்தாயா-பாகிஸ்தான் மூன்று முறை மோதிக்கொள்வதை இரசிகர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் சில ஆண்டுகளாக இருநாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல் தவிர்த்து வரும் சூழலில், ஒரு தொடரில் மூன்று முறை மோதிக்கொள்ளும் வாய்ப்பிருப்பது, இருநாட்டு கிரிக்கெட் இரசிகர்களையுமே உற்சாகப்படுத்தி இருக்கிறது.மேலும் அதிகப்படியான எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருக்கிறது. கடந்த முறை டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்ததிற்கு இந்த முறை இந்திய அணி பதிலடி தரவேண்டும் என்று இந்திய இரசிகர்களும், இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் வெற்றி தொடர வேண்டும் என்று பாகிஸ்தான் இரசிகர்களும் எதிர்பார்க்க, கிரிக்கெட் உலகில் ஆசியக்கோப்பை தொடர் முக்கியமான தொடராக மாறுகிறது!

ஆசியக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி:

- Advertisement -

பாபர் ஆசம் (கேப்டன்)
மொகம்மத் ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்)
பகார் ஜமான்
குஷ்தில் ஷா
ஹைதர் அலி
இப்திகர் அகமத்
ஆசிப் அலி
சதாப் கான்
மொகம்மத் வாசிம் ஜூனியர்
ஹாரிஸ் ரவூப்
மொகம்மத் நவாஸ்
ஷாகின் ஷா அப்ரிடி
நசீம் ஷா
செனாவாஸ் தகானி
உஸ்மான் காதிர்