இந்தியா பாகிஸ்தான் மோதும் 2022 ஆசியக் கோப்பை போட்டியின் தேதி அறிவிப்பு

0
225

இந்திய அணி தற்போது இங்கிலாந்திற்குப் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதலில் நடந்த ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காம் எட்ஜ்பஸ்டன் நகரில் நடந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் 378 ரன்களை விரட்டி அற்புதமான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதற்கடுத்து இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நாளை முதல் போட்டியில் செளதாம்டனில் விளையாடுகிறது. இதற்கடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த ரோகித் சர்மா முதல் டி20 போட்டியில் விளையாடுகிறார்.

இதற்கடுத்து இங்கிருந்து நேராக வெஸ்ட் இன்டீஸ் செல்லும் இந்திய அணி, அங்கு முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதற்கடுத்து இந்திய அணி ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் என்ன செய்யும் என்ற சந்தேகம் நிலவி வந்தது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் உலகக்கோப்பை போட்டியில் அக்டோபர் மாதம்தான் இந்திய அணி விளையாடுகிறது.

தற்போது இந்தச் சந்தேகத்திற்கான விடை கிடைத்து இருக்கிறது. வெஸ்ட் இன்டீஸ் அணியோடு ஐந்து போட்டிகள் கொண்டடி20 தொடரை ஆகஸ்ட் மாதம் முதல்வார இறுதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பும் இந்திய அணி, இலங்கையில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாகத் தகுதிபெறுகின்றன. யு.ஏ.இ, நேபாளம், பூடான், ஹாங்காங், ஓமன் மற்றும் பிற அணிகளுக்குத் தகுதி சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தச் தகுதி சுற்றுப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி தொடங்குகின்றன. முக்கிய ஆட்டங்கள் 27ஆம்தேதியும், இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி 28 ஆம் தேதியும் நடக்கிறது. இறுதிபோட்டி செப்டம்பர் 11ஆம் தேதி நடக்கிறது. இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அமைய உள்ளது தொடரை சுவராசியமானதாக மாற்றும். இரு அணிகளும் கடந்த ஆண்டு யு.ஏ.இ-ல் நடந்த டி20 உலகக்கோப்பையில் மோதி இருந்தன. இந்தத் தொடர் இலங்கையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது!