சில வாரங்களுக்கு முன்பாக இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி இந்திய தேர்வுக் குழுவால் அறிவிக்கப்பட்டது.
உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என இரண்டு இடதுகை சுழற் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருந்தார்கள்.
இருவரும் பந்துவீச்சில் ஒரே வகைமையைத் தருகின்ற காரணத்தினால், அக்சர் படேலுக்கு பதிலாக வலதுகை சுழற் பந்துவீச்சாள ஆல்ரவுண்டர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லை வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவரை தேர்வு செய்திருக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தது. குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்ய வேண்டும் என்கின்ற குரல்கள் அதிகமாகவே எதிரொலித்தது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் வலதுகை சுழற் பந்துவீச்சாளர்களின் பங்கு என்ன? என்பதை இந்திய அணி நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. மேலும் அக்சர் படேல் காயம் அடைந்திருக்கின்ற காரணத்தினால் தற்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருக்கும் ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் தற்பொழுது கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் தனது விமர்சனத்தை முன்வைத்து பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்பொழுது
“உலகின் மிகச்சிறந்த சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை நீங்கள் தற்போது பெற்று உள்ளீர்கள். ஆனால் உலகக்கோப்பை போன்ற ஒரு பெரிய அழுத்தம் இருக்கும் தொடரில், ஒரு மூத்த வீரர் இந்த வடிவத்தில் திடீரென நுழைந்து சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்க முடியாது.
அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடி தனது தகுதியை தற்பொழுது நிரூபித்து இருக்கவில்லை. எனவே நீங்கள் அவரது தேர்வை விதியின் போக்கில் விட்டிருக்கிறீர்கள்.
இங்கே அஸ்வின் குறித்து ஒரு திட்டமிடல் இல்லை. அப்படி திட்டம் இருந்து இருந்தால் அவருக்கு இதற்கு முன்பே சில வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
தற்பொழுது அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுவார். ஆனால் அவருக்கு இது போதுமானதாக இருக்குமா? அவர் பத்து ஓவர் வீசுவார். இதற்குள் அவர் அணிக்கு தகுந்த மாதிரி தன்னை சரி செய்து கொள்ள வேண்டும். இது அவ்வளவு எளிதானது அல்ல. அஸ்வின் விஷயத்தில் திட்டமிடல் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!