இந்திய கிரிக்கெட் அணியையும் தொற்றிய பொன்னியின் செல்வன் காய்ச்சல் ; தியேட்டர் தேடிய அஸ்வின்!

0
1248
Ashwin

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட தென்ஆப்பிரிக்க அணி இந்தியா வந்திருக்கிறது. முதலில் டி20 நடக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அர்ஸ்தீப் சிங் ஆட்ட நாயகன் விருதை வென்றார்!

இதையடுத்து தொடரின் 2வது டி20 போட்டி அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது கவுகாத்தி மைதானத்தில் முகாமிட்டு உள்ளார்கள். மேலும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போட்டி நாளை மாலை ஏழு மணிக்கு துவங்குகிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். மொத்தம் 4 ஓவர்களை வீசிய அவர் வெறும் 8 ரன்கள் மட்டும் கொடுத்து அசத்தினார். நாளைய போட்டியிலும் அவர் அணியில் இடம் பெறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த நிலையில் அணியினரோடு அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த ஒரு ஸ்வீட் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் கவுகாத்தி நகரில் இன்று உலகெங்கும் வெளியான தமிழ் படமான பொன்னியின் செல்வன் எங்கு பார்க்கக் கிடைக்கும்? அங்கு ரிலீஸ் ஆகி இருக்கிறதா என்று ட்வீட் செய்து இருக்கிறார். அதற்கு ஒருவர் அங்கு எந்த தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது என்று பதில் அளித்து இருக்கிறார்.

தமிழ் சோழப்பேரரசின் மிக முக்கிய அரசரான ராஜராஜ சோழனை மையமாக வைத்து, மேலும் வந்தியத்தேவன் குந்தவை,பழுவேட்டரையர், வானதி போன்ற வரலாற்று நிஜ கதாபாத்திரங்களோடு, நந்தினி, இரண்டாம் பழுவேட்டரையர் போன்ற கற்பனை கதாபாத்திரங்களையும் கலந்து 1954ஆம் ஆண்டு கல்கி எழுதிய வரலாற்று தொடர் கதை, தற்போது இயக்குனர் மணிரத்தினம் திரைப்படமாக எடுத்திருக்கிறார். அந்தப் படம் இன்று உலக அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் தங்கியிருக்கும் கவுகாத்தியில் இந்த படம் எங்கு வெளியாகி உள்ளது என்று தேடி இருக்கிறார். இதற்கான ட்விட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.