“கங்கவா இருந்த கோலி, முழுசா சந்திரமுகியா மாறிட்டான்” – விராட் கோலியின் ஆட்டம், இந்தியா-பாகிஸ்தான் போட்டி பற்றி பேசிய அஷ்வின்!

0
4056

இந்தியா – பாகிஸ்தானின் போட்டி மற்றும் விராட் கோலியின் ருத்ரதாண்டவம் பற்றி தனது யூடியூப் வீடியோவில் பேசி உள்ளார் அஷ்வின்.

உலகக் கோப்பை தொடரில் நடந்து முடிந்த விறுவிறுப்பான இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் முடிவிலிருந்து இன்னும் யாரும் வெளிவரவில்லை. அந்த அளவிற்கு திகிலாகவும் பரபரப்பாகவும் அமைந்திருந்தது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் இந்தியாவிற்கு வெற்றியின் சதவீதம் 20-க்கும் குறைவாக இருந்தது. ஆனால் விடாப்பிடியாக விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் களத்தில் நின்று இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர்.

குறிப்பாக விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார். அவரது ஆட்டம் கடைசி 20 பந்துகளில் வேறு மாறியாக இருந்தது என்று பலரும் தெரிவித்து இருக்கின்றனர்.

போட்டியின் கடைசி பந்தை எதிர்கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின், பரபரப்பான அந்த சூழலில் எவ்வாறு அந்த ஒரு ரன்னை எடுக்க முடிந்தது? அந்த ஒரு ரன் எடுப்பதற்கு எவ்வளவு போராட்டங்கள் தனது மனதிற்குள் இருந்தது? என்பது பற்றியும், விராட் கோலியின் பேட்டிங் பற்றியும் தனது யூடியூப் சேனலில் பேசி உள்ளார்.

- Advertisement -

அவர் கூறுகையில், “இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியை பற்றி நான் 4, 5 தகவல்கள் மட்டுமே கூற வேண்டும். கிட்டத்தட்ட 2010-11ஆம் ஆண்டுகளில் இருந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் நானும் பங்கேற்று விளையாடி வருகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்களின் விறுவிறுப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. துளியும் குறையவில்லை.

தேசிய கீதத்தில் துவங்கி கடைசி பந்து வரை ரசிகர்கள் மட்டுமே இந்த போட்டியை இவ்வளவு விறுவிறுப்பாக எடுத்துச் சென்றிருக்கின்றனர். முதலில் பவுலிங் செய்த நாங்கள் 140 ரண்களுக்குள் சுருட்டி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் 160 ரன்கள் வரை அடித்து விட்டார்கள். அதையும் நாங்கள் எளிதாக அடித்து விடலாம் என்று நினைத்தோம். ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது.” என்றார்.

பாகிஸ்தான அணியை பற்றி பேசிய அவர், “கடந்த நான்கு வருடங்களில் பாகிஸ்தான் அணியின் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கிறது. ஷாகின் சா மற்றும் ஹாரிஸ் ராப் இருவரும் பந்து வீசிய விதம் உலகத்தரம் மிக்கதாக இருந்தது. குறிப்பாக ஹாரிஸ் ராப் இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தினார்.” என்றார்.

பின்னர் விராட் கோலியை பற்றி மனம் திறந்து பேசிய அஸ்வின், கடைசி ஓவரில் தன்னிடம் விராத் கோலி என்ன பேசினார் என்பதையும் கூறியுள்ளார்.

“45 பந்துகளுக்கு பிறகு, கங்காவாக இருந்த விராட் கோலி முழு சந்திரமுகியாக மாறினார். அவருக்குள் ஏதோ ஆவி புகுந்தது போல் விளையாடிகொண்டிருந்தார். தினேஷ் கார்த்திக் ஆட்டம் இழந்து வெளியே சென்றபோது, “படுபாவி” என்று அவர் காதில் கேட்கும்படி கூறிவிட்டு நான் உள்ளே வந்தேன். ஒரு பந்தில் இரண்டு ரன்கள் அடிப்பது எப்படி என்பது மட்டுமே என் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.

விராட் கோலி, ‘இங்கே அடி. அங்கே அடி!’ என்று கூறினார். அது எதுவும் எனக்கு கேட்கவில்லை. நல்ல வேலை பந்தை ஒயிடாக வீசினார். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் அடிக்க வேண்டும் என்று இருந்தபோது, விராட் கோலிக்காகவாவது இதை நாம் செய்து விட வேண்டும் என்று மட்டுமே என் மனதில் இருந்தது.

விராட் கோலிக்கு இத்தனை ரன்களை கொடுத்த கடவுள் நிச்சயம் எனக்கு அந்த ஒரு ரன்னை கொடுப்பார் என்றும் நினைத்துக் கொண்டு அடித்தேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று புரியவில்லை. இதுவரை என் வாழ்நாளில் விளையாடிய போட்டிகளில் இதுதான் மிகச்சிறந்தது என்ற அளவிற்கு ஒரு உணர்வு இருந்தது.” என்றார்.