இந்த தங்கத்த பத்திரமா பாத்துக்கோங்க, அடுத்த உலககோப்பையை வாங்கி தருவாரு – இளம் வீரருக்கு ஜான்டி ரோட்ஸ் ஆதரவு!

0
2196

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளருக்கு ஆதரவாக பேசியுள்ளார் ஜான்டி ரோட்ஸ்.

இந்திய அணி டி20 உலககோப்பைக்கு செல்வதற்கு முன்னர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகினார். இதனால் இந்திய அணியினுடைய பந்துவீச்சு எப்படி இருக்குமோ? என்ற சந்தேகம் பலருக்கு இருந்து வந்தது.

புவனேஸ்வர் குமார் சமீப காலமாக சரியாக பந்து வீசாமல் இருந்தார். முகமது சமி, ஓர் ஆண்டாக டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். யார் பந்துவீச்சில் வழிநடத்துவார் என்கிற குழப்பம் நிலவியது.

எதிர்பாராத விதமாக மொத்த இந்திய அணியின் பந்துவீச்சையும் தன் தோள் மீது சுமந்து கொண்டு ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் வீழ்த்தி அசத்தி இருக்கிறார் அர்ஷதீப் சிங். இதன் மூலம் இந்தியாவில் இவரது எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிசிசிஐ இவர் மீது கூடுதல் நம்பிக்கை வைத்திருக்கிறது.

இந்நிலையில் அர்ஷதீப் சிங்கிற்கு ஆதரவாக பேசிய தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், அவருக்கு இதைமட்டும் செய்து விடாதீர்கள் என்றும் கூறியுள்ளார்.

“கடந்த இரண்டு வருடங்களாக அர்சதீப் சிங் தன்னை மிகச் சிறப்பாக வளர்த்துக் கொண்டார். பும்ரா எப்படி மிக விரைவாக தன்னை வளர்த்துக் கொண்டு இந்திய அணிக்குள் நுழைந்தாரோ! அதுபோல அர்ஷதீப் சிங் தற்போது செய்திருக்கிறார்.

பஞ்சாப் அணியில் நான் அவருக்கு பயிற்சி கொடுத்தவரை, விரைவாக கற்றுக்கொண்டு செயல்படக் கூடியவர்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரமுடன் அர்ஷதிப் சிங்கை ஒப்பிட்டு பேசுவது ஆரோக்கியமானதாக இருந்தாலும், அவருக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும். ஏனெனில் வாசிம் அக்ரம் கிரிக்கெட்டில் தன்னை யார் என்று நிரூபித்திருக்கிறார். ஆனால் அர்ஷதீப் இப்போது தான் வளர்ந்து வருகிறார். இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதற்குள் இப்படி ஒப்பிட்டு பேசினால் கூடுதல் அழுத்தம் ஏற்படும். அதை கையாளும் அளவிற்கு இன்னும் அர்ஷதிப் முதிர்ச்சி அடையவில்லை.

டி20 உலக கோப்பையில் அர்ஷதிப் செயல்பட்ட விதத்தை பார்க்கும் பொழுது அவருக்கு இருக்கும் திறமையை பலரும் குறைத்து எடை போட்டு விட்டார்கள் என தெரிந்தது. மேலும் இந்திய அணியில் இன்னும் சில ஆண்டுகள் அபாரமாக செயல்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இவரை நன்றாக பாதுகாக்க வேண்டும். இவரின் உடல்நலத்திலும் அதீத கவனத்தை காட்டவேண்டும்.

இதே ஃபார்மில் இருந்தால் நிச்சயம் அடுத்த டி20 உலக கோப்பையில் இந்தியாவின் பந்துவீச்சை வழிநடத்தி கோப்பையை பெற்று தரும் அளவிற்கு திறமை படைத்தவராக இருக்கிறார்.” என்று புகழாரம் சூட்டினார்.