அரசியலுக்கு வரப் போறீங்களா? – ஷிகர் தவான் பரபரப்பான பதில்!

0
83
Shikar Dhawan

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் துரதிஷ்டமான வீரர்கள் என்றால் அதில் முதலிடத்தில் ஷிகர் தவான் இருப்பார். இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் முயற்சித்த போதெல்லாம் அதற்கு முதலில் பலி கொடுக்கப்பட்ட வீரர் 3 வடிவத்திலும் இவர்தான்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு துவக்க ஆட்டக்காரருக்கு 40 ரன் சராசரி என்பது மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இத்தகைய 40 ரன் சராசரியில் அவர் இருந்த பொழுதே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

ஐபிஎல் டி20 தொடரில் மிகவும் வெற்றிகரமான இந்திய வீரராக இவர் இருந்த போதும், இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இடது கை ஆட்டக்காரர்களின் தேவை இருந்த பொழுதும், டி20 கிரிக்கெட் அணியை மாற்றம் செய்ய முதலில் வீழ்த்தப்பட்டவர் இவர்தான்.

இதுவெல்லாம் ஒருபுறம் நடந்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் இந்தியாவில் நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை மனதில் கொண்டு செயல்பட்டு வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைக்காக ரோகித் சர்மா தலைமையிலான அணி டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்த, அந்த நேரத்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கு இவர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

இவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஒருநாள் தொடரில் கொண்டுவரப்பட்ட சுப்மன் கில்லிடமே தற்போது ஒருநாள் இந்திய கிரிக்கெட் அணியில் தனது இடத்தை இழந்து வெளியேறி வந்திருக்கிறார். ஆனால் இத்தனை நடந்த பிறகும் அவர் இது குறித்து எல்லாம் பெரிய அளவில் வருத்தப்படுவதே கிடையாது. அதே சமயத்தில் அவர் யாரையும் குறையும் கூறவில்லை. கடைசியாக இது பற்றி பேசி இருந்த பொழுது கூட என்னை விட ஒருவர் நன்றாக விளையாடுவதால்தான் அணிக்கு உள்ளே இருக்கிறார் நான் வெளியே இருக்கிறேன் என்று பேசி இருந்தார். அந்த அளவிற்கு மனிதர் பக்குவப்பட்டவராக இருக்கிறார்!

- Advertisement -

இந்த நிலையில் மீண்டும் இது குறித்து பேசி உள்ள தற்பொழுது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ள ஷிகர் தவான் சில முக்கியமான விஷயங்கள் தொடர்பாக பதில் அளித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
” நாம் நன்றாக செயல்படாத பொழுது சமூக வலைதளங்கள் மற்றும் செய்தித்தாள்கள் இவற்றில் தவறாகத்தான் நம்மைப் பற்றி எழுதப்படும். அப்படி இருக்கும் பொழுது நாம் ஏன் அவற்றைப் படிக்க வேண்டும்? மேலும் அதில் வரும் கமெண்ட்களை எல்லாம் நாம் கண்டு கொள்ளக்கூடாது. அதேபோல் நாம் ஏதாவது நன்றாக செய்யும் பொழுது அங்கு நன்றாக எழுதப்படும். அப்போது அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். நான் எப்போதும் நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்!” என்று மீண்டும் தன்னுடைய பக்குவமான அணுகுமுறையை வெளிப்படுத்தி இருக்கிறார்!

அரசியலுக்கு வருகின்ற யோசனை இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர் ” அரசியலில் நுழைவது பற்றி நான் இன்னும் யோசிக்க இல்லை. என் விதியில் அதுதான் எழுதப்பட்டிருந்தால் நான் என்ன செய்ய முடியும்? நான் அதை முழு மனதுடன் செய்வேன். இயற்கைக்கு என்று சொந்தமான வண்ணங்கள் உண்டு. இதிலிருந்துதான் பல விஷயங்கள் வெளியே வருகின்றன!” என்று கூறியிருக்கிறார்!