தேவையில்லாத வீண் பேச்சு வேண்டாம் – பங்களாதேஷிற்கு எதிராக நியூசிலாந்தின் வரலாற்று தோல்வி குறித்து பேசியுள்ள ஸ்டீபன் பிளெமிங்

0
879
Stephen Fleming about Nz Test loss vs Ban

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டி வரலாற்றில் பங்களாதேஷ் அணி முதல் முறையாக நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து அணியை வீழ்த்தி, தன்னுடைய முதல் வெற்றியை ருசி பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டெவான் கான்வே 122 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் விளையாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 458 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மோமினுல் 88 ரன்களும், லிதோன் தாஸ் 86 ரன்களும், மஹ்மதுன் ஹசன் 78 ரன்களும் போட்டி போட்டுக் கொண்டு குவித்தனர்.

- Advertisement -

130 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடத் தொடங்கிய நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில் யங் மட்டும் 69 ரன்கள் குவித்தார். பங்களாதேஷ் அணியில் சிறப்பாக பந்து வீசிய எபாடாட் ஹுசைன் 21 ஓவர்கள் வீசி 46 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய பங்களாதேஷ் அணி 17 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் பங்களாதேஷ் அணி நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து அணியை முதல் முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தேவையில்லாமல் அதைப்பற்றி அதிக அளவில் பேச வேண்டாம்

நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தனது ட்விட்டர் வலைதளத்தில் அண்மையில் ஒரு பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் “நியூசிலாந்து அணி குறித்து எப்படிப் பேசினாலும் அது தேவையில்லாத வீண் பேச்சாக தான் இருக்கும். பங்களாதேஷ் அணி போட்டியில் டாஸ் வென்று சிறப்பாக விளையாடி இருக்கிறது. அந்த அணி வீரர்கள் மிக சிறப்பாக விளையாடிய காரணத்தினால் வரலாற்று வெற்றியை அவர்கள் படைத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகள். தற்போது 2-வது டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.