இம்பேக்ட் பிளேயர் ரூலை அடுத்து மற்றுமொரு புதிய அசத்தல் ரூல் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிறது!

0
638
IPL

உலகின் நம்பர் 1 டி20 லீக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் 15 ஆண்டுகளாக நடத்தி வரும் ஐபிஎல் தொடர் இருந்து வருகிறது. பதினாறாவது ஐபிஎல் சீசன் இந்த மாதம் இறுதி 31ஆம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி வரை நடந்து முடிவடைய இருக்கிறது!

ஐபிஎல் தொடரை சுவாரஸ்யப்படுத்தும் விதமாக இந்த வருடம் இம்பேக்ட் பிளேயர் எனும் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய விதி வெளிநாட்டு வீரர்களுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இம்பாக்ட் பிளேயர் ரூல் என்றால், நீங்கள் ஆட்டத்தின் நடுவில் ஒருமுறை ஒரு வீரருக்காக மாற்று வீரரை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி நீங்கள் யாரை மாற்று வீரராகப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறீர்களோ, அதற்கு நான்கு வீரர்களை நீங்கள் ஆட்டத்திற்கு முன்பாக தெரிவித்து விட வேண்டும். பின்பு அந்த நான்கு வீரர்களில் இருந்து ஒருவரை, நீங்கள் இன்னொரு வீரருக்கு மாற்றாக, ஆட்டத்தில் ஒரு ஓவர் முடிவடையும் பொழுதோ அல்லது ஒரு விக்கெட் விழும் பொழுதோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்படிப் பயன்படுத்தப்படும் இம்பேக்ட் பிளேயர் நேரடியாக அணியில் இடம் பெற்று விளையாடும் வீரர் என்னென்ன செய்ய களத்தில் அனுமதி உண்டோ அவற்றை எல்லாவற்றையும் இவரும் செய்ய அனுமதி உண்டு.

தற்பொழுது மேலும் ஒரு புதிய விதி இந்த வருட ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அது என்னவென்றால், டாஸ் போடப்பட்டு யார் முதலில் விளையாடுகிறார்கள் என்று முடிவு தெரிந்த பின்பு, இரு அணி கேப்டன்களும் எந்தெந்த வீரர்களை கொண்டு விளையாட விரும்புகிறார்கள் என்பதைத் தெரிவிக்கலாம்.

- Advertisement -

இதற்கு முன்பு பொதுவாக கிரிக்கெட்டில் டாஸ் போடப்படுவதற்கு முன்பே விளையாடும் 11 வீரர்கள் கொண்ட பட்டியலை போட்டி நடத்தும் நடுவரிடம் தந்து விட வேண்டும். ஆனால் தற்பொழுது ஐபிஎல் தொடரில் இந்த விதி மாற்றப்பட்டு இருக்கிறது. இது முதல்முறையாக இந்த வருட தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு நேரங்களில் நடத்தப்படும் டி20 ஆட்டங்களில் பனிப்பொழிவு ஒரு முக்கிய காரணியாக வெற்றி தோல்விகளில் விளங்குகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பந்து வீசி இரண்டாவதாக பேட் செய்கையில் வெற்றி பெறுவது கொஞ்சம் எளிதாக இருக்கிறது. இப்படி டாஸ் வெற்றி தோல்வியில் முக்கிய பங்கு வகிப்பதை ஓரளவு தவிர்க்க, முதலாவது, இரண்டாவது பேட் செய்வதற்கு தகுந்தார் போல் அணியை அமைக்க இது உதவி செய்யும்.

மேலும் இந்த விதி இம்பேக்ட் பிளேயர் விதிக்கும் ஓரளவுக்கு உதவி செய்யக் கூடியது. ஆடுகளம் மற்றும் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து, நாம் முதலில் யாரை வைத்து விளையாட வேண்டும்? இரண்டாவது யாரை வைத்து விளையாட வேண்டும்? என்பதை இதன் மூலம் முடிவு செய்து கொள்ளலாம். இந்த விதி இரு அணிக்குமே பொருந்தும் என்பதால், களம் இறங்கும் இரண்டு அணிகளுமே பலம் வாய்ந்த பிளேயிங் லெவனையே இறக்கும். இதனால் ஆட்டத்தில் போட்டித் தன்மை பலமாக இருக்கும் இது ரசிகர்களுக்கு சுவாரசியத்தைக் கூட்டக்கூடியது.