மைதானத்தில் கையில் பிரஷோடு ஓடிக் கொண்டிருந்த இந்திய ஊழியர்; காரணம் என்ன?

0
35651
ICT

இன்று ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை எதிர்த்து மிக முக்கியமான ஆட்டத்தில் விளையாடியது. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணிக்கு அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணி கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரது அரை சதங்களால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 21 பந்துகளில் 50 ரன்கள் விளாசி இந்திய அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கினார்.

பங்களாதேஷ் அணி ஏழு ஓவர்களுக்கு 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை வந்து ஆட்டம் தடைபட்டது. இதற்குப் பிறகு ஆட்டம் துவங்கிய நிலையில் பங்களாதேஷ் அணிக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

மழை நின்று களமிறங்கிய இந்திய அணி பந்து வீசிக் கொண்டிருந்த பொழுது மைதானத்தைச் சுற்றி கையில் பிரஷோடு இந்திய அணி ஊழியர் ஒருவர் சுற்றி சுழன்று கொண்டிருந்தார்.

- Advertisement -

அவர் வலைப்பயிற்சியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பயிற்சி செய்ய பந்தை எறியக்கூடியவர். இவரது பெயர் ரகு. ஏன் இவர் இப்படி கையில் பிரஷோடு மைதானத்தைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார் என்றால், மழை பெய்திருந்த காரணத்தால் வீரர்கள் ஓடும் பொழுது வழுக்கி விழவும் காயம் அடையவும் அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் வீரர்களின் காலணியில் தரையை ஊன்றிப் பிடிப்பதற்காக ஆணி போன்று வைக்கப்பட்டு இருக்கும். இந்த ஆணிகளில் புற்கள், மண் ஏதாவது சிக்கினால், ஆணி தரையோடு ஏற்படுத்தும் உராய்வு குறையும். இதனால் வீரர்கள் பீல்டிங் செய்ய ஓடும் பொழுது வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம்.

எனவே இந்திய அணியின் த்ரோடவுன் ஸ்பெசலிஸ்ட் ரகு வீரர்களின் காலணியில் புற்கள் அல்லது மண் ஏதாவது சேர்ந்து இருந்தால் அதை சுத்தம் செய்வதற்காக, மைதானத்தின் எல்லாப் புறங்களிலும் ஓடி வேலை செய்து கொண்டு இருந்தார். இந்த ஆட்டத்தில் ஏதாவது பிரச்சனைகள் வரும் என்பதை தாண்டி, முக்கியமான வீரர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்து எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாமல் போனால் இந்த உலகக் கோப்பை தொடரில் அது இந்திய அணிக்கு பெரிய பிரச்சினையாக அமையும் என்பதால், முன்னெச்சரிக்கையாக புத்திசாலித்தனமாக இப்படி இந்திய அணி நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது!