ஆஸ்திரேலியாவில் ரோகித் சர்மாவுக்கு பந்துவீசி அசத்திய 11 வயது இந்தியச் சிறுவன் – வீடியோ இணைப்பு!

0
948
Rohitsharma

ஆஸ்திரேலியாவில் இன்று துவங்கியுள்ள எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி புறப்பட்டு, மேற்கு ஆஸ்திரேலியா சென்று, அங்கு அமைந்துள்ள பெர்த் மைதானத்தில் தனது பயிற்சியை ஆரம்பித்தது!

மேலும் மேற்கு ஆஸ்திரேலிய அணியுடன் பெர்த் மைதானத்தில் இரண்டு பயிற்சி போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. இதற்கு அடுத்து டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணிக்கு ஐசிசி வழங்கியுள்ள இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட நேற்று பிரிஸ்பேன் வந்து சேர்ந்தது.

இந்த நிலையில் பெர்த் மைதானத்தில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்ட பொழுது, அங்கு காலை நேரத்தில் ஒரு நூறு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததை ரோகித்சர்மா பார்த்திருக்கிறார், அதில் 11 வயது இருக்கக்கூடிய த்ருசில் சவுகான் என்ற ஒரு இந்திய சிறுவனின் வேகப்பந்து வீச்சு அவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. பின்பு அந்தச் சிறுவனை அழைத்து ரோகித்சர்மா பந்துவீச கூறியிருக்கிறார். இதுபற்றி பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய அணி ஊழியர் ஹரி மோகன் பேசியுள்ள வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து ஹரி மோகன் கூறும் பொழுது ” நாங்கள் ஒரு பயிற்சிக்காக பெர்த் வந்தோம். நாங்கள் எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் நுழைந்த பொழுது அங்கிருந்து ஒரு நூறு குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க முடிந்தது. அந்தக் கூட்டத்தில் ஒரு குழந்தையை ரோகித் சர்மா தான் முதலில் கண்டார். அவர் வீசிய இரண்டு மூன்று பந்துகள் மற்றும், பந்து வீச அவர் ஓடிவரும் முறை மற்றும் வீசும் முறை அவர் எவ்வளவு இயல்பான திறமையை கொண்டிருக்கிறார் என்பதை எங்களுக்கு காட்டியது” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இந்திய கேப்டனுக்கு பந்துவீசும் வாய்ப்பைப் பெற்ற இந்த குழந்தைக்கு இது என்றுமே மறக்க முடியாத ஒரு தருணமாக இருக்கும். மேலும் அவர் எங்கள் டிரஸ்ஸிங் ரூமுக்கு வரவழைக்கப்பட்டார். அவர் எங்களின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் சிறிது நேரம் இருந்தார். அது பார்ப்பதற்கு மிகச்சிறந்த காட்சியாக இருந்தது ” என்று கூறியுள்ளார்.

ரோகித் சர்மா அந்தக் குழந்தையிடம் உரையாடும் பொழுது ” நீங்கள் பெர்த்தில் இருக்கிறீர்கள். எப்படி இந்தியாவுக்கு விளையாடுவீர்கள்?” என்று கேட்க, அதற்கு அந்த குழந்தை ” நான் இந்தியா வரத்தான் போகிறேன். ஆனால் நான் நன்றாக விளையாடுவேனா என்று தெரியாது” என்று மிகச் சிறப்பான பதிலைச் சொல்லி அவரை மேலும் ஆச்சரியப்பட செய்தார் அந்த இந்திய சிறுவன்.