வெளிய சென்றால் அடிக்கலாம். அதானே ரூல்ஸ்! அதைத்தான் அலெக்ஸ் கேரி செய்தார் – சர்ச்சையான ரன் அவுட்டுக்கு பேட் கம்மின்ஸ் கருத்து!

0
2752

வெளியே சென்றால் அடிக்கலாம் அல்லவா? அதைத்தானே விதி சொல்கிறது. நாங்கள் செய்ததில் தவறு இல்லை என்று பேர்ஸ்டோவ் சர்ச்சையான முறையில் ரன் அவுட் ஆனதற்கு கருத்து தெரிவித்திருக்கிறார் பேட் கம்மின்ஸ்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதினாலே அதில் சர்ச்சைக்கு துளியும் பஞ்சம் இருக்காது. அதற்கேற்றவாறு ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதியபோது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.

- Advertisement -

மிச்சல் ஸ்டார் கேட்ச் எடுத்தபோது, பந்து தரையில் பட்டுவிட்டது. அவுட் இல்லை! என்று மூன்றாம் நடுவர் கொடுத்ததால் ஆஸ்திரேலியா ரசிகர்கள் மற்றும் வீரர்கள் ஆத்திரமடைந்தனர். பின்னர் பேர்ஸ்டோவ்-ஐ ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்த போது அதற்கு மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்தார் இந்த விவகாரமும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் அடித்தும் வீண் ஆனது. போட்டி முடிந்த பிறகும் பேர்ஸ்டோவ் ரன் அவுட் குறித்து இரு தரப்பு அணியின் கேப்டன்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

பேட் கம்மின்ஸ் சர்ச்சையான ரன் அவுட் குறித்து பேசியதாவது:

- Advertisement -

“அலெக்ஸ் கேரி எடுத்து உடனே அதை செய்துவிடவில்லை. இதற்கு முன்னர் சில பந்துகளிலும் பேர்ஸ்டோவ் பந்து முழுமையாக நிறைவடைவதற்குள் வெளியே சென்றுள்ளார். இனி அப்படி சென்றால் அடிக்கலாம் என்று காத்திருந்த அலெக்ஸ் கேரி, சரியான விதிமுறையை பின்பற்றி செய்திருக்கிறார்.

பந்தை பிடித்தவுடன் அதை சில நொடிகள் நிறுத்தி அடிக்காமல், உடனடியாக அடித்துவிட்டார். இது விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் வருகிறது. அதன் காரணமாகவே மூன்றாவது நடுவரும் அவுட் கொடுத்திருக்கிறார். விதிமுறைகள் படி செய்வது எப்படி தவறாகும்?. சிலருக்கு இது ஏற்புடையதாக இல்லை என்றாலும் விதி மீறி எதுவும் நடக்கவில்லை.

நேற்று மிட்ச்சல் ஸ்டார்க் பிடித்த கேட்ச் எங்களுக்கு அவுட் என்று தெரிந்தது. ஆனால் கடைசியில் விதிமுறைப்படி அது அவுட் இல்லை என்று உறுதியானது. முதலில் எங்களுக்கு அது ஏற்புடையதாக இல்லை என்றாலும், பின்னர் விதிமுறைப்படி மூன்றாம் நடுவர் கொடுத்துள்ளார் என்பதால் ஏற்றுக் கொண்டோம்.

போட்டிகளில் இது போன்று முரண்கள் இருப்பதும், அதை சரி செய்து உரிய முடிவுகளை கொடுப்பதற்கு மூன்றாவது நடுவர்களும் இருக்கின்றனர். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.” என்றார்.