மும்பை அணிக்கு கேப்டனாகிறார் ரகானே! ப்ரித்வி ஷா, ஷ்ரதுல் தாகூர்க்கு வாய்ப்பு!

0
2086

சையது முஸ்தக் அலி தொடரில் பங்கேற்கும் மும்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் அஜிங்கியா ரகானே.

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக விளையாடி வந்த அஜிங்கியா ரகானே, 2021ல் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை என்பதால், தென்னாபிரிக்கா தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் இருந்து வெளியில் அமர்த்தப்பட்டார். சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்பதால் உள்ளூர் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டார்.

மும்பை அணிக்காக விளையாடி வரும் இவர் துலீப் டிராபியில் வெஸ்ட் ஸோன் அணியை வழி நடத்தினார். இறுதிப்போட்டி வரை எடுத்துச் சென்று கோப்பையையும் பெற்று தந்தார்.

இந்நிலையில் வரவிருக்கும் சையது முஸ்தக் அலி டி20 தொடருக்கு மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதீத அனுபவம் கொண்ட ரகானே அணியை வழி நடத்துவது கூடுதல் நம்பிக்கையை நிர்வாகத்திற்கு கொடுத்திருக்கிறது என்று இந்த அறிவிப்பை வெளியிட்ட போது மும்பை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மும்பை அணியில் இளம் வீரர் பிரித்வி ஷா இடம் பெற்றுள்ளார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அசத்தி வரும் இவர் அதிரடியான துவக்கத்திற்கு பெயர் போனவர். இவருடன் சேர்ந்து துலீப் டிராபியில் சிறப்பாக செயல்பட்ட யஜஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களமிறங்குகிறார்.

டி20 உலக கோப்பை அணியில் இடம்பெறாத ஷ்ரதுல் தாகூர், சையது முஸ்தக் அலி தொடரில் விளையாடுவதற்கு எடுக்கப்பட்டிருக்கிறார். தென் ஆப்பிரிக்கா அணியுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இவர் விளையாடுவார் என்பதால், சையது முஸ்தக் அலி தொடரின் ஓரிரு போட்டிகளில் இருக்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இளம் வீரர் சர்பராஸ் கான் மும்பை அணியில் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் சையது முஸ்தக் அலி தொடருக்கு முன்பாக இராணி கோப்பை தொடரை விளையாடிவிட்டு வருவார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வரும் சிவம் தூபே, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக நன்றாக செயல்பட்டார். இவருக்கு சையது முஸ்தக் அலி தொடரில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு தேர்வு குழுவின் கவனத்தையும் ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

மும்பை அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 11ஆம் தேதி மிசோரம் அணிக்கு எதிராக துவங்குகிறது.

சையது முஸ்தப் அலி தொடரில் பங்கேற்கும் மும்பை அணி வீரர்களின் பட்டியல்:

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிருத்வி ஷா, சர்ஃபராஸ் கான், ஷர்துல் தாக்கூர், ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், ஹர்திக் தாமோர், பிரசாந்த் சோலங்கி, தவால் குல்கர்னி, துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, அமன் கான், சாய்ராஜ் பாட்டீல், மோஹித்.