கில்லோட பேட்டிங் பார்த்த பிறகுதான், 6 விக்கெட் போனாலும் ஜெயிக்க முடியும்ன்னு போராடுனோம் – 140 அடித்த மைக்கல் பிரேஸ்வெல் பேட்டி!

0
2047

ஆறு விக்கெட் போன பிறகும், எந்த நம்பிக்கையில் ஜெயிக்க முடியும் என்று கடைசி வரை போராடினேன்? என பேட்டியில் கூறியுள்ளார் மைக்கல் பிரேஸ்வெல்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து எட்டு விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் அடித்திருந்தது. இதில் துவக்க வீரராக களம் இறங்கி கடைசி ஓவர் வரை விளையாடிய சுப்மன் கில் 149 பந்துகளில் 208 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் எவரும் அரைசதம் கூட அடிக்கவில்லை.

350 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அப்போது 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சான்டனர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் இருவரும் எதிர்பாராத வகையில் வெறும் 111 பந்துகளில் 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

வெற்றிக்கு இன்னும் 60 ரன்கள் தேவை என இருந்தபோது சான்டனர் ஆட்டம் இழந்து விட்டார். ஆனாலும் ஆட்டத்தை கடைசி ஓவர் வரை பிரேஸ்வெல் எடுத்துச் சென்றார். நியூசிலாந்து அணிக்கு 9 விக்கெட்கள் விழுந்துவிட்டன. கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை சிக்ஸர் அடித்த பிரேஸ்வெல், துரதிஷ்டவசமாக அடுத்த பந்தில் ஆட்டம் இழந்துவிட்டார். இதனால் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த பிரேஸ்வெல் கூறுகையில்,

“ஏற்கனவே நிறைய விக்கெட் போய்விட்டது. ஆகையால் அழுத்தம் எதுவும் எனக்குள் இல்லை. புதிதாக எதையும் முயற்சிக்காமல், கிடைக்கும் மோசமான பந்துகளை மட்டும் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பாட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்கிற திட்டம் மட்டும் தான் எங்கள் கையில் இருந்தது. அதை வெளிப்படுத்தினோம். துரதிஷ்டவசமாக 12 ரன்களில் போட்டியை இழந்து விட்டோம்.

ஷுப்மன் கில் பேட்டிங் செய்யும்பொழுது மைதானம் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கிறது என்று புரிந்து கொண்டேன். குறிப்பாக பந்து பழசாக மாறினால் நன்றாக பேட்டிங் செய்ய முடியும் என்று பொறுமையாக காத்திருந்தேன். கடைசியில் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். இந்தியா போன்ற பலம்மிக்க அணிக்கு எதிராக நன்றாக போராடியது இன்னும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.” என்றார்.