இங்கிலாந்துக்கு அடுத்து அயர்லாந்தை அடித்து நொறுக்கி பறக்க விட்ட பங்களாதேஷ்!

0
277
Ban vs Ire

அயர்லாந்து அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர், டி20 தொடர் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் என மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாட பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது!

இன்று முதலில் துவங்கிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அயர்லாந்து அணியை நொறுக்கி தள்ளிவிட்டது!

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய கேப்டன் தமிம் இக்பால் 3 ரன்னிலும், லிட்டன் தாஸ் 26 ரன்களிலும், அடுத்து வந்த இளம் வீரர் சாண்டோ 25 ரன்களிலும் வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து இணைந்த அனுபவ வீரர் சகிப் அல் ஹசன் மற்றும் இன்றைய போட்டியில் அறிமுகமான இளம் வீரர் தவ்ஹிட் ஹ்ரிடாய் இருவரும் இணைந்து நான்காவது இக்கட்டுக்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். சகிப் அல் ஹசன் 89 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 93 ரன்னிலும், இளம் வீரர் ஹ்ரிடாய் 85 பந்தில் எட்டு பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் உடன் 92 ரன்னிலும் ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து வந்த மற்றும் ஒரு அனுபவ வீரர் முஷ்பிகுர் ரகுமான் 26 பந்தில் மூன்று பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் உடன் 44 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பங்களாதேஷ் அணி எட்டு விக்கட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பங்களாதேஷ் மண்ணில் மிக கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய அயர்லாந்து அணிக்கு துவக்க ஜோடி 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்து நம்பிக்கை அளித்தது. ஆனால் அடுத்த 95 ரன்கள் சேர்ப்பதற்குள் மொத்த விக்கட்டையும் இழந்து அயர்லாந்து அணி 155 ரண்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் பங்களாதேஷ் அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று தற்பொழுது தொடரில் முன்னிலை வகிக்கிறது. அபாரமாக பந்து வீசிய எபாடட் உசைன் நான்கு விக்கெட்டுகளும், நசூம் அஹமத் மூன்று விக்கட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்கள்.

இன்றைய போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டு 85 பந்தில் 92 ரன்கள் குவித்த ஹ்ரிடாய் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உள்நாட்டில் வைத்து உலக டி20 சாம்பியன் இங்கிலாந்தை டி20 தொடரில் மூன்று போட்டிகளில் மூன்றிலும் வீழ்த்தி அசத்திய பங்களாதேஷ் தற்பொழுது அயர்லாந்தை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வீழ்த்தி அசத்தியிருக்கிறது!