ஆஸ்திரேலியாவை அச்சுறுத்திய ஆப்கானிஸ்தான் ; ஆஸ்திரேலியா இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பு என்ன?

0
14398
Aus vs Afg

எட்டாவது டி20 உலக கோப்பை தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா அணி இன்று வாழ்வா சாவா போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் அடிலைடு மைதானத்தில் மோதியது!

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பின்ச் மற்றும் அதிரடி வீரர் டிம் டேவிட் இருவரும் இடம் பெறவில்லை. போட்டிக்கான டாசை வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

பவர் பிளேவில் ஆஸ்திரேலியா அணி டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் கிரீன் ஸ்டீவன் ஸ்மித் மூவரது விக்கட்டையும் இழந்து 52 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்து மிட்சல் மார்ஸ் 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து மேக்ஸ்வெல் மிகச் சிறப்பாக விளையாடி 32 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அந்த அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குர்பாஸ் 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் தந்தார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த இப்ராகிம் ஜட்ரன் மற்றும் குல்புதீன் நைப் இருவரும் சேர்ந்து நல்ல கூட்டணி அமைத்து 99 ரன்கள் வரை அணியை கூட்டிச் சென்றார்கள்.

இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக குல்புதின் ஜாம்பா பந்துவீச்சில் ரன் அவுட் ஆக, அடுத்த பந்தில் இப்ராகிம் கேட்ச் ஆக, அதே ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் நஜிபுல்லா ஜட்ரன் கேட்ச் ஆக, அதற்கு அடுத்து உடனே கேப்டன் முகமது நபி ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது.

ஆனால் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ரஷீத் கான் அதிரடியாக விளையாடி கடைசி வரை நின்று போராடினார். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 33 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்த அவர், கடைசி ஓவருக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலையில், 17 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை இறுதிவரை அச்சுறுத்தினார். அவரது போராட்டம் முழுமையாக வெற்றிக்கு போகவில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

நாளை இங்கிலாந்து இலங்கை அணிகள் மோதும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு நியூசிலாந்து அணி உடன் சேர்ந்து தனது குழுவில் தகுதி பெறும். அந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலோ இல்லை இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தாலோ, இங்கிலாந்து அணி வெளியேற ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணி உடன் அரையிறுதிக்கு முன்னேறும்!