“அடேங்கப்பா 10 வினாடிக்கு இத்தனை லட்சமா?” – உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிக்கான விளம்பர கட்டணம் வெளியானது!

0
335
Odiwc2023

உலக கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் எந்த ஒரு நாட்டின் மைதானத்தில் மோதினாலும், அதை இந்திய ரசிகர்கள் வீட்டிலிருந்தபடி பார்ப்பார்கள் என்பதைவிட, மைதானமே நிறையும் என்பதுதான், இந்த இரு நாடுகளும் விளையாடும் போட்டிக்கு எந்த அளவில் முக்கியத்துவமும் வியாபாரமும் இருக்கிறது என்பதற்கான சாட்சி!

தற்போது சில மாதங்களில் மட்டும் ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி குறைந்தபட்சம் மூன்று முறை மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எல்லாம் மிகச் சரியாக அமைந்தால் ஐந்து முறையும் மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

- Advertisement -

இரு அணிகளும் தனிப்பட்ட இருநாட்டு தொடர்களில் விளையாடி பல ஆண்டுகள் ஆகின்றது என்பதால், ஒரே வருடத்தில் இத்தனை போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாட இருப்பது, இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் தாண்டி, வணிக ரீதியாக பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. குறிப்பாக பெரிய தொகைக்கு இந்திய கிரிக்கெட்டை ஒளிபரப்பும் உரிமையை வாங்கி உள்ள தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இது மிகவும் இனிப்பான செய்தி.

தற்பொழுது இந்திய அணி உள்நாட்டில் விளையாடும் எல்லா போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமமும் ஸ்டார் டிஸ்னி நிறுவனத்திடம்தான் இருக்கிறது. தொலைக்காட்சி என்று மட்டும் இல்லாமல் ஆன்லைனிலும் ஒளிபரப்பும் உரிமை இவர்களிடம்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இதற்கான உரிமத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.

தற்பொழுது அதை திருப்பி எடுப்பதற்கான வணிக ரீதியான லாபத்தை குவிப்பதற்கான ஒரு காலக்கட்டத்தில் இருக்கிறார்கள். காரணம் உலகக் கோப்பைத் தொடர் வருகிறது. மேலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி குறைந்தபட்சம் மூன்றாவது இந்த வருடத்தில் நடக்க இருக்கிறது என்பதுதான்.

- Advertisement -

இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியின் போது, இடையில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கான கட்டணத்தின் விவரம் வெளியே கசிந்திருக்கிறது. இதன்படி வெறும் 10 வினாடிக்கான விளம்பர கட்டணமாக 30 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இது பாதகமான பங்கு சந்தை நிலைமைகளை ஈடுகட்ட கடந்த காலங்களை விட டிஸ்னி ஸ்டார் 30 முதல் 35 சதவீதம் விளம்பர கட்டணத்தை அதிகரித்து இருக்கிறது.

உலகக் கோப்பையின் முந்தைய பதிப்புகளை போலவே தற்பொழுதும் இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டி பார்வையாளர்கள் வகையில் பழைய சாதனைகளை முறியடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த வருடம் டி20 உலக கோப்பையில் இரு அணிகளும் மோதிக்கொண்ட பொழுது ஹாட் ஸ்டாரில் 1.8 கோடி பார்வையாளர்களையும், ஆசியக் கோப்பையில் மோதிக்கொண்ட பொழுது 1.4 கோடி பார்வையாளர்களையும் பெற்றிருந்தது.

மேலும் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் 273 மில்லியன் ஆகவும், இந்தியாவில் டிஜிட்டல் தளங்களில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 50 மில்லியன் ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே இதுவரை கிரிக்கெட்டில் பார்க்கப்பட்ட அதிகபட்ச பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆகும். இந்த முறை இந்தச் சாதனை உடைபடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக டிஸ்னி ஸ்டார் கருதுகிறது!