“அடேய் கேமராமேன்” முகர்ந்து பாத்த வீடியோவுக்கு அஷ்வின் போட்ட பதில் ட்வீட்!

0
11765

இணையதளத்தில் வைரலாகி வரும் அஷ்வினின் வீடியோவிற்கு, அவரே ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார்.

நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற பின்பு, கடைசி சூப்பர் 12 போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டு விளையாடியது. இப்போட்டியில் சூரியகுமார் யாதவ் 40 பந்துகளில் 61 ரன்கள் அடித்து, அணியின் ஸ்கோரை 186 ரன்களாக உயர எடுத்துச்சென்றார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஜிம்பாப்வே அணியை, பந்துவீச்சிலும் ஆதிக்கம் செலுத்தி 115 ரன்களுக்குள் சுருட்டியது இந்தியா. இதன் மூலம் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சூப்பர் 12 சுற்றில் 8 புள்ளிகள் பெற்று, குரூப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

வருகிற 10ம் தேதி நடைபெறும் அரை இறுதி போட்டியில் இங்கிலாந்தை அடிலெய்டு மைதானத்தில் இந்திய அணி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் மைதானத்தில் இந்திய அணி பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்திருக்கிறது.

ரோகித் சர்மா டாஸ் போடுவதற்காக நின்று கொண்டு வர்ணனையாளரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பின்புறம் பயிற்சியில் ஈடுபட்ட பின், பெவிலியனுக்கு செல்வதற்கு முன் அஸ்வின் தனது ஸ்வட்டரை தேடிக் கொண்டிருந்தார்.

அங்கு இரண்டு ஸ்வட்டர்கள் இருந்ததால் அதில் எது தன்னுடையது என்று முகர்ந்து பார்த்து தேடிக் கொண்டிருந்தார். இது கேமராவில் பதிவாகி விட்டது. இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் நகைப்பூட்டி வருகிறது.

இதனை முன்னாள் இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங் , அபினவ் முகுந்த் உள்ளிட்டோர் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோவை பலமுறை பார்த்ததாகவும், அது தனக்கு மீண்டும் மீண்டும் சிரிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறி, சரியான ஜெர்சியை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்ற லாஜிக்கை கற்றுக் கொடுக்கும் படி அஸ்வினிடம் ட்விட்டரில் கேட்டார்.

இதற்கு பதில் அளித்துள்ள அஸ்வின், “சைஸ் வித்தியாசம் இல்லை, அதில் இனிஷியல் இல்லை, கடைசியாக நான் பயன்படுத்தும் பெர்ஃப்யூம் வாசம் எதிலிருந்து வருகிறது என பார்த்தேன்.” என்று பதில் அளித்தார். மேலும் அதில், “அடேய் கேமராமேன்.” என்று தமிழில் குறிப்பிட்டது கூடுதல் நகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.