மீண்டும் பெங்களூர் அணியில் இணையும் ஏபி டிவில்லியர்ஸ் – ரசிகர்கள் மகிழ்ச்சி

0
941
Ab de Villiers and Virat Kohli RCB

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்தது. தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது. அடுத்ததாக பெங்களூரு மைதானத்தில் நடக்கவுள்ள பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.

ஒரு பக்கம் டெஸ்ட் போட்டிகள் நடந்து கொண்டிருந்தாலும் தற்போது ரசிகர்களின் கவனம் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பிவிட்டது. வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடிய சென்னை மற்றும் கொல்கத்தா அணி இந்த முறை முதல் போட்டியில் விளையாடி தொடரை தொடங்க உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து லீக் போட்டிகளும் மும்பையில் உள்ள நான்கு மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ளது. 8 அணிகளுக்கு பதிலாக இந்த முறை 10 அணிகள் பங்கு இருப்பதால் ஏற்கனவே ஐபிஎல் தொடரின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதலே பங்கேற்று வரும் அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஒருமுறைகூட ஐபிஎல் கோப்பையை வெல்லா விட்டாலும் இந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற அணிகளுக்கு ஈடாக ரசிகர் படை உண்டு. அதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர்கள் இரண்டு வீரர்கள். ஒன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் இரண்டாவதாக தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ். இதில் டி வில்லியர்ஸ் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

இனிமேல் டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அதிர்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தொடரில் டிவிலியர்ஸ் பெங்களூரு அணியின் வழிகாட்டியாக பணியாற்றப் போகிறார் என்ற தகவல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏபி டிவில்லியர்ஸின் வழிகாட்டுதலால் பெங்களூரு அணி இந்த முறை நன்றாக செயல்பட்டு கோப்பையை வெல்லும் என்று அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.