இவங்ககிட்ட எந்தத் தெளிவும் கிடையாது – ரோகித் சர்மா ராகுல் டிராவிட் மீது ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

0
29
Aakash chopra

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை படுதோல்விக்கு பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் நடைபெற்றது. மூன்று வடிவ இந்திய கிரிக்கெட்டுக்கும் ரோகித் சர்மா கேப்டனாகவும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராகவும் வந்தார்கள்.

இவர்களின் தலைமையில் கீழ் இந்திய அணியின் ஆட்ட முறை மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் புதிய பந்துவீச்சு கூட்டணிகள் பரிசோதிக்கப்பட்டன. போலவே புதிய பேட்ஸ்மேன்களும் அணிக்குள் வந்தனர். இளம் வீரர்களை கொண்டு வந்தது மட்டுமில்லாமல் மூத்த வீரர்கள் அஸ்வின் தினேஷ் கார்த்திகையும் அணிக்குள் கொண்டு வந்தார்கள்.

இவர்களின் இந்த பரிசோதனை முயற்சிகள் எல்லாமே ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் துவங்க இருக்கின்ற டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்தே இருக்கிறது. இதற்கு ஒரு முன்னோட்டமாக ஆசிய கோப்பை தொடர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான ஆசிய கோப்பை அணி அறிவிக்கப்பட்ட பொழுது அதில் ஏன் முகமது சமி இல்லை என்ற விவாதம் உருவாகியிருந்தது. காரணம் அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவும் இல்லை.

ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணி டி20 போட்டிகளில் துவக்க வீரர்களாக, இஷான் கிஷான், ருதுராஜ், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை பரிசோதனை செய்தது. ஆனால் முடிவில் அறுவை சிகிச்சைக்கு பின் அணிக்குள் வந்த வழக்கமான துவக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் தான் துவக்க வீரராக களம் இறங்கினார்.

இப்படியான நிலையில் தற்போது ஆசிய கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இருந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் இந்திய அணியில் மேற்கொள்ளப்பட்ட எல்லா பரிசோதனை முயற்சிகளும் தற்போது கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரும் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணி மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். இவர்களின் செயல்பாட்டில் எந்த ஒரு தெளிவுமே இல்லை என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது ” இந்த தொடர் ஆரம்பிக்கும் பொழுது 100 சதவிகிதம் உங்களின் டாப் ஆர்டரில் இருவர் கிரிக்கெட் விளையாடாமல் அணிக்குள் வருகிறார்கள் என்று நாங்கள் விவாதித்தோம். இடையில் நீங்கள் பலரை பல வித்தியாசமான இடங்களில் முயற்சி செய்து பார்த்தீர்கள். அதில் எந்த ஒரு தெளிவும் இல்லை அதை உங்களால் நியாயப்படுத்த முடியாது” என்று கூறினார்…

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “மீண்டும் எப்போது சூரியகுமாரை ஓபன் செய்யப் போகிறீர்கள். உலகக் கோப்பை வரை சூரியகுமாரை ஓபன் செய்தால் அது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இதில்லாமல் ரிஷப், தீபக் ஹூடா போன்றவர்கள் இருக்கிறார்கள். மேலும் ருதுராஜ் இசான் வெளியில் உட்கார வைக்கப்பட்டிருந்தார்கள். இதில் எதுவுமே தெளிவில்லை” என்று கடுமையாக குற்றம் சாட்டி இருக்கிறார்!