இரண்டே மாதத்தில் இரண்டு நாடுகளுக்கு விளையாடிக் கொண்டிருக்கும் அதிசய வீரர் ; டி20 உலகக்கோப்பை சுவராசியம்!

0
2653
Logan van beek

இன்று 8வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நமிபியா இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த தகுதி சுற்றில் முதல் ஆட்டத்தின் மூலம் துவங்கியது. இந்த ஆட்டத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இலங்கை அணியை நமீபியா அணி வீழ்த்தியது.

தகுதிச் சுற்றின் இரண்டாவது போட்டி நெதர்லாந்து மற்றும் யுஏஇ அணிகளுக்கு இடையே நடந்தது. கடைசி ஓவர் வரை நீடித்த இந்த பரபரப்பான போட்டியில் யுஏஇ அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியது.

இந்தப்போட்டியில் நெதர்லாந்து அணிக்காக விளையாடிய ஒரு வீரர் குறித்து ஒரு சுவராசியமான கதை இருக்கிறது. அதாவது இரண்டு மாத கால இடைவெளியில் இரண்டு நாடுகளுக்கு கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்.

இவர் பெயர் லோகன் வான் பீக் என்பதாகும். இவர் வலது கை மித வேகப்பந்து வீச்சு பேட்டிங் ஆல்ரவுண்டர் ஆவார். இவர் நியூசிலாந்து உள்நாட்டு தொடர்களில் விளையாடுவார். அத்தோடு 2012ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்து தேசிய அணிக்கும் விளையாடி வருகிறார். மேலும் இவர் நியூசிலாந்து அண்டர் 19 கூடைப்பந்து சாம்பியன் ஷிப் அணியிலும் இருந்தவர்.

இவர் இந்த வருடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியா வந்திருந்த நியூசிலாந்து ஏ அணியில் இடம் பெற்று இருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியில் இந்திய ஏ அணிக்கு எதிராக 12 ஓவர்கள் பந்துவீசி முப்பத்தி ஒன்பது ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நியூசிலாந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடுவதால் இவருக்கு நெதர்லாந்து தேசிய அணியில் விளையாடுவதற்கு நிபந்தனை ஏதும் கிடையாது. தேசிய அணிக்காக விளையாடிய வீரர், அந்த அணிக்கு 3 வருடங்கள் விளையாடாமல் இருந்தால் மட்டுமே இன்னொரு தேசிய கிரிக்கெட் அணிக்கு விளையாட முடியும் என்பது விதியாகும்.

மேலும் இவர் நியூசிலாந்து உள்நாட்டு கிரிக்கெட் அணி பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். இவரது தாத்தாவான சமி குய்லன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.