சூர்யா மாதிரி ஆள் கிடைக்காது ; விளையாடுறப்பவே ரசிங்க!- கம்பீர் மாஸ் பேச்சு!

0
6270
Gambhir

தற்போது கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட் வடிவம் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. எதிர்காலத்தில் இந்த கிரிக்கெட் வடிவம்தான் கிரிக்கெட் என்று மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த வடிவ கிரிக்கெட்டில் சில காலத்திற்கு முன்பு கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ், கேப்டன் மற்றும் ஃபினிஷராக மகேந்திர சிங் தோனி ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள் !

இந்த நிலையில் ஒவ்வொரு அணியிலும் வழக்கத்திற்கு மாறான புதுமையான ஷாட்களை விளையாடும் வீரர்கள் தேவைப்பட்டார்கள். ஒரு புறத்தில் ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல், இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் போன்றவர்கள் தொடர்ச்சியாக இந்த முறையில் தங்கள் அணிகளுக்காக சிறந்த பங்களிப்பை தந்து கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் இந்த வடிவ கிரிக்கெட்டுக்கான புதுமையான ஷாட்களின் பிதாமகன் ஏபி.டிவில்லியர்ஸ் போல ஒரு வீரர் கிரிக்கெட் உலகத்திற்கு வரவில்லை. மேலும் இதெல்லாம் இந்திய அணியின் விளையாட்டு முறைக்கு ஒரு கனவாகவே இருந்தது. அப்பொழுதுதான் ஐபிஎல் தொடர் மூலம் சூரியகுமார் யாதவ் புதுமையான ஷாட்களின் மூலம் கவனம் ஈர்த்து மும்பை அணியில் இணைந்து 2 சீசன்களில் மிகச் சிறப்பான ரன்குவிப்பை மேற்கொண்டு, இந்திய டி20 அணியில் இடம் பெற்றார். ஆனால் அவருக்கு கடந்த ஆண்டு சரியாக அமையவில்லை.

அதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காகப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இந்த வருடத்தில் டி20 கிரிக்கெட்டில் முதல் ஆயிரம் ரன்களை கடந்தவர் என்றவர் சாதனையோடு, ஒரு வருடத்தில் டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். மேலும் நான்காம் இடத்தில் 180 க்கு மேல் ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் ஒரே பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். இன்று இதற்கு முத்தாய்ப்பாக டி20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 25 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கம்பீர் கூறும் பொழுது ” விராட் கோலி கே.எல். ராகுல் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் பாரம்பரியமான முறையில் விளையாடக்கூடியவர்கள். ஆனால் சூரியகுமார் யாதவ் வித்தியாசமானவர். அவரை பார்த்து ரசியுங்கள் மகிழ்ச்சி அடையுங்கள். ஏனென்றால் இது போன்ற வீரர்கள் உங்களுக்கு அடிக்கடி கிடைப்பதில்லை. குறிப்பாக இந்தியாவுக்கு இப்படி எப்போதும் அமைந்ததில்லை” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “பேட்டிங்கில் நம்பர் நான்காம் இடத்தில் நீங்கள் நிலைத்தன்மை தரக்கூடிய பாரம்பரிய முறையில் விளையாடக்கூடிய ஒரு பேட்ஸ்மேனைதான் கொண்டு வருவீர்கள். ஆனால் அதே வீரர்கள் தொடர்ச்சியாக தரும் ரன்களை சூரியகுமார் 180 ஸ்ட்ரைக் ரேட்டில் தந்தால் எப்படி இருக்கும்? யோசித்துப் பாருங்கள் இதே தொடரில் 180 ஸ்ட்ரைக் ரேட்டில் 200 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். இந்தத் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் சூர்யாதான் இந்தத் தொடரின் நாயகன். பவர் பிளேவில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைப்பதில்லை. ஆனால் நடு வரிசையில் பேட்டிங் செய்து 180 ஸ்ட்ரைக் ரேட்டில் இருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் நம்பர் நான்காம் இடத்தில் விளையாடக்கூடிய எந்த பேட்ஸ்மேன்களும் அவர் அணிக்கு தந்த தாக்கத்தை தரவில்லை ” என்று கூறியிருக்கிறார்!