இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய கேப்டன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தலான பல சாதனைகளை படைத்திருக்கிறார்.
நேற்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கில் 114 ரன்கள் எடுத்த, ஜடேஜா 41 ரன் உடன் இருவரும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்கள்.
அசத்தல் பார்ட்னர்ஷிப்
இதைத் தொடர்ந்து இன்று விளையாடிய இந்திய அணிக்கு இந்த ஜோடி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தது. அசத்தலாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 137 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 89 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 279 பந்துகளில் 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
இதைத் தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்கு சென்று விட்டு வந்த பிறகு கேப்டன் வில் தனது அதிரடியை ஆரம்பித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 311 பந்துகளில் தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் இரட்டை சதத்தை நிறைவு செய்து அசத்தினார். இதில் 21 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடக்கம்.
கில் மெகா சாதனை
இந்த இரட்டை சதத்தின் மூலமாக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என நான்கு நாடுகள் சேர்ந்த கூட்டணியான சேனா நாடுகளில் முதல் இரட்டை சதம் அடித்த ஆசிய கேப்டன் என்ற சாதனையை இந்திய கேப்டன் கில் படைத்தார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு தொடரும் 10 நிமிட சோகம்.. 11 ரன்னில் ஜடேஜா தவறவிட்ட மகத்தான சாதனை.. 2வது டெஸ்ட்
மேலும் இங்கிலாந்து எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் மற்றும் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். இத்துடன் இங்கிலாந்தில் கவாஸ்கர் மற்றும் ராகுல் டிராவிட் இருவருக்கு அடுத்து இரட்டை சதம் அடித்த இந்தியா பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். தற்போது இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 480 ரன்கள் தாண்டி எடுத்திருக்கிறது.






