இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு இங்கிலாந்து வீரர்கள் சைக்கிளில் வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ள நிலையில் இன்று மூன்றாவது போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
சைக்கிளில் இங்கிலாந்து வீரர்கள்
இந்த நிலையில் மூன்றாவது போட்டி தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து அணியின் வீரர்கள் சைக்கிளில் மைதானத்திற்கு வந்து சேர்ந்த நிகழ்வு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லண்டன் தேம்ஸ் நதிக்கு வடக்கே கடுமையான போக்குவரத்து ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தினால், இங்கிலாந்து வீரர்கள் பேருந்தில் இருந்து சைக்கிளுக்கு மாறி மைதானத்திற்கு வந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.
தற்போது இங்கிலாந்து லண்டனில் கடுமையான போக்குவரத்து நெரிசல் திடீரென ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஓவல் மைதானத்திற்கு வீரர்கள் வந்து சேர்வதில் பெரிய அளவில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்கள் சமயோசிதமாக செயல்பட்டு சாலையில் இருக்கும் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு மைதானத்திற்கு வந்திருக்கிறார்கள்.
வராத வெஸ்ட் இண்டீஸ்
அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பேருந்திலேயே இருந்து போக்குவரத்து சரி ஆவதற்காக காத்திருந்திருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களால் நேரத்திற்கு வந்து பயிற்சி செய்ய முடியவில்லை. ஆனால் நிலைமை சரியாகி அவர்கள் மைதானத்தை வந்தடைந்ததும் டாஸ் போடப்பட்டு போட்டி துவங்கி விட்டது.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. அம்பத்தி ராயுடு ஆர்சிபிக்கு திடீர் ஆதரவு.. கோப்பையை வெல்ல வாழ்த்து
தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்ததுமே பத்து ஓவர்களுக்குள்ளாக மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மேலும் இங்கிலாந்து வீரர்கள் சைக்கிளில் மைதானத்திற்கு வந்தது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது!






