சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடர்ந்து ஓய்வு பெற்றது இந்திய கிரிக்கெட்டை சிதைத்து விடும் என்று யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
மேலும் 2011ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்த பொழுது வீரர்கள் ஓய்வு பெறுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட பிறகு இந்திய அணி இன்னும் மீளவில்லை என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார். இதன் மூலம் மறைமுகமாக மீண்டும் தோனியை தாக்கி பேசி இருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு நடந்தது என்ன?
இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்றது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இருந்து வந்த நட்சத்திரங்கள் ஓய்வு பெற்றார்கள். அந்த நேரத்தில் மகேந்திர சிங் தோனி வயது அதிகமான வீரர்கள் விளையாடுவதை விரும்பவில்லை என்றும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போதும் இந்திய டெஸ்ட் அணி இளைஞர் பட்டாளத்தால் நிரம்ப வேண்டிய கட்டாயம் உருவாகி இருப்பதாகவும், இப்படி இளைஞர்களை வைத்து உருவாக்கப்படும் அணி சிதைந்து விடும் என்றும், எனவே விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற சிறந்த வீரர்கள் 50 வயது வரையில் விளையாட வேண்டும் என்றும் யோக்ராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி சிதைந்து விடும்
இது குறித்து பேசி இருக்கும் யோக்ராஜ் சிங் கூறும்பொழுது ” 2011 ஆம் ஆண்டு பல வீரர்கள் நீக்கப்பட்டார்கள். மேலும் சில வீரர்கள் ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அந்த நேரத்தில் சிதைந்த இந்திய அணியை இப்பொழுது வரையில் சரி செய்ய முடியவில்லை. எல்லோருக்கும் ஓய்வு பெறுவதற்கான காலம் வரத்தான் செய்யும். என் மகன் ஓய்வு பெற்ற பொழுது நான் இது சரியான நேரம் இல்லை என்று சொன்னேன். மேலும் சிறந்த வீரர் ஒருவர் நடக்க முடியாத நிலையில்தான் ஓய்வு பெற வேண்டும்”
இதையும் படிங்க : உண்மையில் விராட் கோலியை எனக்கு பிடிக்காது.. ஆனா பிறகு நடந்தது இதுதான் – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி
“ஒருவேளை விராட் கோலி தான் இன்னும் சாதிக்க எதுவும் இல்லை என்று நினைத்திருக்கலாம். ரோகித் சர்மாவை பொறுத்தவரையில் அவருக்கு ஒரே ஒரு ஆள் மட்டுமே தேவை. அவரை தினமும் காலை 5 மணிக்கு ஓட வைக்கும் ஒரு ஆள் தேவை. மேலும் தற்போது அறிவுரை சொல்லக்கூடிய அளவுக்கு சீனியர்கள் யாரும் இல்லாததால், இப்படியான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இருவருமே ஓய்வு பெற்றது தவறு” என்று கூறி இருக்கிறார்.






